தமிழக அரசின் கடும் எச்சரிகையையும், வேண்டுகோளையும் ஏற்று பல்வேறு மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அனைத்து ஆசிரியர்களும் பணிக்கு திரும்பி விட்டதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

கடந்தப் 8 நாட்களாக ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு ஆசிரியர்களின் நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை ஏற்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்து வந்தது. ஆனால், செவி சாய்க்காத ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடு பட்டு வந்தனர். பணிக்கு திரும்பாத ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. பணிக்கு வராத ஆசிரியர்களின் பணியிடங்களை விருப்பப்பட்ட ஆசிரியர்களுக்கு பணியிடமாற்றம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நேற்று பணிக்கு திரும்பிய ஆசிரியர்களுக்கு, காலியாக அறிவிக்கப்பட்ட இடங்களில் அவர்கள் விரும்பிய இடத்திற்கு பணி மாறுதல் வழங்கப்பட்டது. இன்று காலை 9 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டுமென பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது. இதனையடுத்து 96 சதவிகித ஆசிரியர்கள் இன்று பணிக்கு திரும்பினர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் 100 சதவிகித ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி விட்டனர்.  திருச்சி மாவட்டம் முசிறி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 100 ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டனர்.

தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் 70 சதவிகிதம் பேர் பணிக்கு திரும்பி உள்ளனர். சென்னை மாவட்டத்தில் 99.9 சதவிகிதம் பேர் பணியாற்றி வருகிறார்கள். 4 ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை என முதன்மை கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.