திரையரங்குகளில் 100 விழுக்காடு இருக்கைகளுக்கு  அனுமதி அளிக்கப்பட்டிருப்பது  மக்களின் உயிருடன் விளையாடும் ஆபத்தான முடிவு என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்: திரைத்துறையினரின் அழுத்தத்தால், தமிழக அரசு திரையரங்குகளில் 100 விழுக்காடு இருக்கைகளிலும் பார்வையாளர்கள் அமர அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா பரவும் ஆபத்தை கருத்தில் கொள்ளாமல் , 70 விழுக்காடு வேகமாக பரவும் புதிய உருமாறிய கொரோனா பரவும் காலக் கட்டத்தில் இத்தகைய அனுமதி கொடுத்திருப்பது பொதுமக்களின் நலன்களுக்கு எதிரானது. இது மக்களின் உயிரோடு விளையாடும் செயலாகும். 

தனிநபர் இடைவெளியை பரமாரிக்க வேண்டும், கூட்டம் உள்ள இடங்களை தவிர்க்க வேண்டும், மூடிய காற்றோட்டம் இல்லாத இடங்களை தவிர்க்க வேண்டும் என உலக நல நிறுவனம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மத்திய அரசும் இதை அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு இத்தகைய முடிவை எடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பொதுமக்களின் உயிரைவிட திரைப்படத் தயாரிப்பாளர்களின் பொருளாதார நலனை முக்கியமானதாக தமிழக அரசு கருதுவது வியப்பைத் தருகிறது.

கடந்த எட்டு மாதங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை குணப்படுத்திடவும்,கொரோனா பரவலை தடுத்திடவும் மருத்துவர்கள் ,செவிலியர்கள் ,மருத்துவத்துறை பணியாளர்கள் மிகக் கடுமையாக உழைத்துள்ளனர். பல் வேறு இன்னல்களை அனுபவித்துள்ளனர்.பலர் உயிரையும் தியாகம் செய்துள்ளனர்.இந்நிலையில் கொரோனா பரவும் வகையில் அரசு செயல்படுவது, மருத்துவப் பணியாளர்களையும், முன்களப் பணியாளர்களையும் இழிவு படுத்தும் செயலாகும்.

கொரோனாவால் பொருளாதார பாதிப்புக்கு உள்ளான திரைத்துறையினருக்கு இழப்பீடு வழங்கலாமே ஒழிய,அவர்கள் நலன் காத்தல் என்ற பெயரில் கொரோனாவை பரப்ப வழி வகுத்தல் சரியல்ல. அறிவார்ந்த செயலாகாது. எனவே,தமிழக அரசு இந்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். திரைத் துறையினரும் சமூகப் பொறுப்போடு செயல்பட வேண்டும். தங்களது ரசிகர்களும், அவர்களின் குடும்பங்களும் கொரோனாவால் பாதிக்காமல் காக்கும் கடமை முன்னணி திரை நட்சத்திரங்களுக்கும், கலைஞர்களுக்கும் உள்ளது. அக்கடமையை அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது.