கொரோனா சூழலில் பள்ளிகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்த மு.க.ஸ்டாலின், தேர்வுகளை நடத்த எதிர்ப்பு தெரிவித்த மு.க.ஸ்டாலின் திரையரங்குகளில் 100 சதவீத ரசிகர்களை அனுமதித்த விவகாரத்தில் மட்டும் மவுனமாக இருப்பது ஏன் என்கிற கேள்வி எழ ஆரம்பித்துள்ளது.

தமிழகத்தில் அப்போது தான் கொரோனா பரவ ஆரம்பித்திருந்தது. ஒரு நாளைக்கு இரண்ட அல்ல மூன்று பேருக்கு கொரோனா உறுதியாகிக் கொண்டிருந்தது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி பொதுத் தேர்வுகளை நடத்த தமிழக அரசு தயாரகிக் கொண்டிருந்தது. ஆனால் கொரோனா பரவும் நிலையில் மாணவர்களின் உயிருடன் விளையாடக்கூடாது தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்ப்பு குரல் கொடுத்தார் மு.க.ஸ்டாலின், இதே போல் கொரோனா தமிழகத்தில் மெல்ல கட்டுக்குள் வந்து கொண்டிருந்த சமயம் பள்ளி கல்லூரிகளை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

கொரோனா முழுமையாக கட்டுக்குள் வராத நிலையில் பள்ளிகளை திறப்பது மாணவர்களின் உயிருக்கு உலை வைக்கும் செயல் என்று எதிர்ப்பு தெரிவித்தார் மு.க.ஸ்டாலின். இதன் பிறகு பள்ளி, கல்வி நிலையங்களை திறக்கும் முடிவை தமிழக அரசு ரத்து செய்தது. இதே போல் கொரோனாவை காரணம் காட்டி பல்வேறு விஷயங்களை நடத்தவே கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு நடிகர் விஜயின் மாஸ்டர் படம் வெளியாக உள்ள நிலையில் திரையரங்குகளில் 100 சதவீதம் ரசிகர்களை அனுமதிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் மாஸ்டர் படத்தை அரங்கு நிறைந்த காட்சிகளாக ரசிகர்கள் கண்டுகளிக்க முடியும். ஆனால் தற்போதும் தமிழகத்தில் ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதியாகி வருகிறது. பிரிட்டனில் இருந்து வீரியமிக்க கொரோனாவும் தமிழகத்தில் இதுவரை 4பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த உருமாறிய கொரோனா பழைய கொரோனாவை காட்டிலும் 70 சதவீதம் அதிக தொற்றும் தன்மை கொண்டது. இப்படியான சூழலில் திரையரங்குகளில் சுமார் 3 மணி நேரம் பூட்டப்பட்ட அரங்கிற்குள் ஆயிரக்கணக்கானவர்கள் அமர்ந்திருக்கும் நிலையில் ஒரே ஒருவருக்கு கொரோனா இருந்தால் என்ன ஆகும்?

அந்த ஒரு நபர் மூலமாக திரையரங்குகளுக்கு வரும் மற்ற பெண்கள், குழந்தைகள் போன்றோருக்கும் கொரோனா வந்து மறுபடியும் தமிழகத்தில் கொரோனா அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனை சுட்டிக்காட்டி மருத்துவர்கள் பலரும் கூட திரையரங்குகளில் 100 சதவீத ரசிகர்களை அனுமதிக்க அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். சமுக வலைதளங்களிலும் இந்த முடிவிற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனால் இது போன்ற விஷயங்களில் முதலில் அறிக்கை வெளியிடும் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார். இதற்கு காரணம் விஜயின் மாஸ்டர் படம் தான் என்கிறார்கள்.

திரையரங்குகளில் 100 சதவீத ரசிகர்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் அதனை நடிகர் விஜய்க்கு எதிரான கருத்தாக திரிக்கும் வாய்ப்பு உள்ளதாக ஸ்டாலின் கருதுவதாக சொல்கிறார்கள். தேர்தல் நேரத்தில் விஜய் போன்ற மாஸ் நடிகரை பகைத்துக் கொள்ள வேண்டுமா? என்றும் ஸ்டாலின் யோசிப்பதாக கூறுகிறார்கள். இதனை யோசனை என்பதை விட ஏன் விஜயை பகைக்க வேண்டும் என்கிற பயம் தான் என்றும் சிலர் சொல்கிறார்கள். அதே சமயம் விஜயை வைத்து தற்போது சன் பிக்சர்ஸ் புதிய படம் ஒன்றை எடுத்து வருகிறது.

எனவே விஜய்க்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவிடாமல் மு.க.ஸ்டாலினிடம் சிலர் லாபி செய்வதாகவும் சொல்கிறார்கள். எது எப்படியோ தமிழகத்தில் தற்போது தான் கொரோனா குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்த நிலையில் விஜய் எனும் ஒரு நடிகரின் சுயநலத்திற்காக தமிழக அரசு திரையரங்குகளில் 100 சதவீத ரசிகர்களை அனுமதித்துள்ளது கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் பிரதான எதிர்கட்சி தலைவரான ஸ்டாலின் அமைதி காப்பது அதை விட விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.