இது நடந்தது திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்த 2006 – 2011 கால கட்டத்தில். 2006ம் ஆண்டு உள்ளாட்சித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் 2009 நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பிறகு துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த சமயம். அப்போது ஐஏஎஸ் அதிகாரி அமுதா வட மாவட்டம் ஒன்றில் கலெக்டராக இருந்து வந்தார். அப்போதே பல அதிரடி நடவடிக்கைகளால் அமுதாவின் பெயர் ஊடகங்களில் தொடர்ச்சியாக வெளியாகி வரும். இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர் மீது ஆட்சியர் அமுதாவிடம் தொடர்ச்சியாக புகார்கள் சென்றன.

ஊராட்சி நிதியை தனது சொந்த தேவைகளுக்காக பயன்படுத்துவதாக அந்த தலைவர் மீது தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இது குறித்து விசாரித்த கலெக்டர் அமுதா விசாரணைக்கு உத்தரவிட்டார். விசாரணையின் போது தான் ஆளும் கட்சியான திமுகவின் ஊராட்சி மன்ற தலைவர் என்று அந்த பெண்மணி ஏடாகூடமாக பேசியுள்ளார். மேலும் விசாரணையின் போது ஊராட்சி நிதியை ஊராட்சி மன்ற தலைவர் தவறாகவும் தனக்காகவும் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் திமுகவை சேர்ந்தவராக இருந்தாலும் ஊராட்சி மன்ற தலைவரை அதிரடியாக பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார் அமுதா. ஊராட்சி மன்ற தலைவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டால் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் மாவட்ட ஆட்சியர்களுக்கு உண்டு. இதன் அடிப்படையில் திமுக ஊராட்சி மன்ற தலைவரை பதவி நீக்கம் செய்த அமுதாவிற்கு ஆளும் கட்சி தரப்பில் இருந்து தொடர்ந்து நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. ஆனால் அதனை சட்டை செய்யாத அமுதா அந்த ஊராட்சி மன்ற தலைவர் மீதான நடவடிக்கையை திரும்ப பெற மறுத்துவிட்டார்.

ஆளும் கட்சி மூலமாக செய்ய முடியவில்லை என்பதால் தனது ஜாதி துணையுடன் இழந்த ஊராட்சி மன்ற தலைவர் பதவியை பெற அந்த பெண்மணி முயன்றார். வட மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தாலும் அந்த பெண்மணி தென்மாவட்டத்தில் பெரும்பான்மையாக இருக்க கூடிய ஒரு ஜாதியை சேர்ந்தவர். இதனால் அந்த ஜாதிச்சங்க தலைவர் ஒருவரை அணுகி உதவி கோரினார். அந்த ஜாதிச் சங்க தலைவர் அப்போது ஸ்டாலின் உள்ளிட்ட திமுக மேல்மட்ட நிர்வாகிகளுடன் நெருக்கமாக இருந்தவர். இதனால் உள்ளாட்சித்துறையையும் கவனித்து வந்த ஸ்டாலினை சந்திக்க அந்த ஊராட்சி தலைவரை அழைத்துச் சென்றுள்ளார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது தங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர் என்றும் திமுகவில் உறுப்பினராக இருக்கிறார் என்றும் கலெக்டர் பதவியை பறித்துவிட்டார் என்றும் அந்த ஜாதிச் சங்க தலைவர் கூற அதற்கென்ன எந்த மாவட்டம் என்று சொல்லுங்கள் கலெக்டரிடம் கூறிவிடுகிறேன் என ஸ்டாலின் கூற உதவியாளரும் செல்போனை எடுத்துவிட்டார், மாவட்ட ஆட்சியர் அமுதா என்றதும், என்னது அமுதாவா? என்று கூறிய ஸ்டாலின் பிறகு பார்க்கலாம் என்று கூறி அந்த ஜாதிச்சங்க தலைவரை திருப்பி அனுப்பிவிட்டார். பிறகு விசாரித்த போது தான், கலைஞராகவே இருந்தாலும் அமுதா நியாயத்தை மட்டுமே தான் செய்வார் என்று கூறியுள்ளனர்.

இப்படி துணை முதலமைச்சராக இருந்த ஸ்டாலினை மட்டும் அல்ல தனது பதவிக் காலத்தில் பல அமைச்சர்களையும் அலறவிட்டவர் அமுதா. இதனால் தான் முக்கியத்துவம் இல்லாத பணிகளில் நியமிக்கப்பட்டு வந்த அமுதா தற்போது தனது நேர்மையால் பிரதமர் அலுவலக இணைச் செயலாளர் ஆகியுள்ளார்.