பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து விவாதிக்க சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள தமிழக அரசின் தலைமை செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இன்று மாலை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கள், உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன், திமுக சார்பில் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், பொன்முடி, திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி, தமிழக  பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், காங்கிரஸ் சார்பில் கோபண்ணா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மதிமுக சார்பில் மல்லை சத்யா உள்பட 21 கட்சி தலைவர்கள் பங்கேற்று விவாதித்தனர்.

இந்த கூட்டத்தில் பேசிய  ஓபிஎஸ், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசு தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. 

பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடை அமல்படுத்தினால் தமிழகத்திற்கு கூடுதலாக ஆயிரம் மருத்துவபடிப்பு இடங்கள் கிடைக்கும். 3825 இடங்களில் 383 இடங்கங்கள் 10 சதவீத இட ஒதுக்கீட்டின் படி வழங்கினாலும் நமக்கு 586 இடங்கள் கூடுதலாக கிடைக்கும் என தெரிவித்தார். 

இதைத் தொடர்ந்து, பேசிய ஸ்டாலின், தமிழகத்தில் பல ஆண்டுகளாக 69  சதவீத இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. அதை பாதுகாக்க முன்னாள் முதலமைச்சர்களான காமராஜர்,அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் நடவடிக்கை எடுத்தார்கள். இதில் யாரும் சமரசம் செய்ததில்லை. 

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்துக்கும், சமூக நீதிக்கும் ஏதிரானது. நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஏற்கனவே ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த அனுமதிக்க கூடாது என தெரிவித்தார்.

இதே போல் கமல்ஹாசன், கி.வீரமணி, முத்தரசன், திருமாவளவன், சீமான், கருணாஸ் உள்ளிட்ட தலைவர்கள் 10 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்விஇ கொங்கு இளைஞர் பேரவை மற்றும் புதிய தமிழகம் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதே போல்  திமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட 16 கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன.