தமிழகத்தில் ஜூன் 10-ஆம் தேதி உறுதி செய்யப்பட்ட 1927 தொற்றுகளில், சென்னையில் 1404 பேருக்கு தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. சென்னையில் தொற்று பாதித்தவரின் எண்ணிக்கை 25,937-ஆக அதிகரித்துள்ளது. இதில், 12,507 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் மட்டும் 258 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தின் ஒட்டுமொத்த பாதிப்பில் சென்னையின் பங்கு 70.4 சதவிகிதம்.

சென்னையில், ஒரே நாளில் நேரத்தில் அதிகபட்சமாக, தேனாம்பேட்டையில் 223 பேரும், தண்டையார்பேட்டையில் 213 பேருக்கும், ராயபுரம் மண்டலத்தில் 213 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மூன்று மண்டலங்களில் ஒரே நாளில் 200-க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. குறிப்பாக, தேனாம்பேட்டையில் தொற்று பரவல் வேகம் தீவிரமடைந்துள்ளது.

அண்ணாநகரில் 184 பேரும், கோடம்பாக்கம் 149 பேரும்,  திரு.வி.க.நகரில் 105 பேரும், அடையாறு 70 பேரும், அம்பத்தூரில் 53 பேரும், மாதவரத்தில் 42 பேரும், திருவொற்றியூரில் 38 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்தபடி உள்ளது.  அதிலும், சென்னையில் அன்றாடம் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் அடைகிறது. 10 நாட்களில் மட்டும் 14 ஆயிரத்து 508 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், கொரோனா வைரஸ் தொற்றால் தமிழகத்தில் இருந்து 1,897 பேரும், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 30 பேர் என மொத்தம் 1,927 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் கொரோனா பாதிப்புக்கு டாக்டர் உள்பட 10 பேர் இன்று பலியாகி உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.  சென்னையில் கீழ்பாக்கத்தில் வசித்து வந்த 70 வயது டாக்டர் ஒருவர் மின்ட் சாலையில் கிளினிக் நடத்தி வந்துள்ளார்.  அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்து உள்ளார்.

இதேபோன்று, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.  அவர்களில் ஒருவர் வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த 56 வயது ஆண் மற்றும் ஏழுகிணறு பகுதியை சேர்ந்த 68 வயது முதியவர் ஒருவர் என தெரிய வந்துள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஓட்டேரி பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.  சென்னை சூளையை சேர்ந்த முதியவர் ஒருவரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

இதனை தொடர்ந்து, சென்னை ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அண்ணா சாலையை சேர்ந்த 66 வயது மூதாட்டி உயிரிழந்து உள்ளார்.  சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.  பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் ஐ.சி.எப். பகுதியை சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். இதனால், சென்னையில் இன்று ஒரே நாளில் 10 பேர் கொரோனா சிகிச்சையில் பலனின்றி பலியாகி உள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.