1 crore rupee prize for cutting the tongue of the Union Minister
மதச்சார்பற்றோர் குறித்து சர்ச்சையான கருத்துக்களை கூறிய மத்திய அமைச்சர் ஆனந்த்குமார் ஹெக்டேவின் நாக்கை வெட்டிக் கொண்டுவருபவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என கர்நாடகாவின் முன்னாள் கலபுரகி பஞ்சாயத்து உறுப்பினரான குருஷாந்த் பட்டிடர் அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் இருந்து 5 முறை மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆனந்த் குமார் ஹெக்டே அண்மையில் கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் அவர் கலந்து கொண்டு பேசும்பொழுது, தங்களை மதசார்பற்றவர்கள் என சிலர் கூறும் ஒரு புதிய கலாசாரம் பிரபலமடைந்து வருகிறது என குறிப்பிட்டார்.
ஆனால் நான் ஒரு முஸ்லிம் அல்லது கிறிஸ்தவன் அல்லது லிங்காயத் அல்லது பிராமின் அல்லது இந்து என பெருமையுடன் ஒருவர் கூறினால் அதற்காக நான் மகிழ்ச்சி அடைவேன்.
ஏனெனில் தனது ரத்தம் பற்றி அவர் அறிந்திருக்கிறார். ஆனால் மதசார்பற்றவர்கள் என தங்களை பற்றி கூறி கொள்பவர்களை நான் எப்படி அழைப்பது என தெரியவில்லை. தங்களது பெற்றோர் வழி பற்றி அறியாதவர்களே தங்களை மதசார்பற்றவர்கள் என கூறி கொள்கின்றனர். அவர்களுக்கு சொந்த அடையாளம் கிடையாது. அவர்களுக்கு பெற்றோர் வழி பற்றியும் தெரியாது. ஆனால் அவர்கள் புத்திசாலிகள் என கூறினார். மத்திய அமைச்சரின் கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்களும், சமுக ஆர்வலர்களும் அமைச்சரின் பேச்சுக்கு கடும் எண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கர்நாடக மாநிலம் கலபுரகி பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினரான குருஷாந்த் பட்டிடர் , செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளிக்கும்போது, ஒரு மாதத்திற்குள் அதாவது ஜனவரி மாதம் 26 ஆம் தேதிக்குள் மத்திய அமைச்சர் ஹெக்டேவின் நாக்கை வெட்டிக் கொண்டு வருபவருக்கு 1 கோடி ரூபாய் பரிசு அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் மத்திய அமைச்சர் ஹெக்டேவின் கருத்துகள் தலித்துகள், முஸ்லிம்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மதசார்பற்ற மக்களுக்கு வலியை ஏற்படுத்தியுள்ளது என கூறினார்..அரசியலமைப்பை ஹெக்டே சிறுமைப்படுத்தி உள்ளார் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
குருஷாந்த் பட்டிடரின் இந்த சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் சித்தராமையா, அரசியலமைப்பை அவர் படிக்கவில்லை. அவருக்கு அரசியல் மொழி தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.
