கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகள் நிரம்பு வழிகின்றன. இந்த இரு அணைகளில் இருந்து மட்டும் தற்போது 1 லட்சம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஒகேனக்கல் உள்ளிட்ட காவிரி ஆறு பொங்கிப் பெருகி ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88 அடியை எட்டியுள்ளது.

கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழையால் முக்கிய அணைகளான கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜ சாகர்,  கபினி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணை தற்போது 123 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 42 ஆயிரம்  கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணை நிரம்ப இன்னும் ஒரு அடி மட்டுமே பாக்கி உள்ளது.

கபினி அணைக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த அணை முழு கொள்ள்ளவை எட்டியுள்ளதால் 50 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது

தற்போது இரு அணைகளிலும் இருந்து கிட்டத்தட்ட ஒரு லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் இன்று மாலைக்குள் ஒகேனக்கல் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து  ஒரு லட்சம்  கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் காவிரி கரையோர பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

காவிரியில் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடிக்கு கீழ் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. நேற்று முன்தினம் 77 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று இரவு 82 அடியை எட்டியது.  தற்போது மேட்டூர் அஒ 88 அடியை எட்டியுள்ளது.

இன்று மாலைக்குள்  மேட்டூர்  அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது குறுவை சாகுபடி செய்து உள்ள விவசாயிகள் மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.