அந்நிய செலாவணி மோசடி வழக்கில் காணொலி காட்சிமூலம் எழும்பூர் நீதிமன்றத்தில் சசிகலா விசாரணைக்கு இன்று ஆஜராகவில்லை. இதனையடுத்து வழக்கு விசாரணை வரும் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

சசிகலா, அவரது அக்கா மகன் பாஸ்கரன் ஆகியோர் 1996 - 97  ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து ஜெ.ஜெ.டிவிக்கு எலெக்ட்ரானிக் பொருட்கள் வாங்கியதில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும், கொடநாடு டீ எஸ்டேட் வாங்கியதில் பல கோடி ரூபாய் வெளிநாடுகளில் இருந்து பறிமாற்றம் செய்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து அமலாக்கத்துறையினர் சசிகலா மீது 4 வழக்குகள் பதிவு செய்தனர். இந்த வழக்கில் சசிகலா மற்றும் பாஸ்கரன் மீது கடந்த 2017-ம் ஆண்டு மூலம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. 

ஆனால் குற்றச்சாட்டு பதிவுக்கு பின்பு சசிகலா தரப்பினர் வழக்கு விசாரணைக்கு சரியாக ஆஜராகவில்லை, குற்றச்சாட்டு பதிவில் சசிகலா கையெழுத்திடவில்லை என்று கூறப்பட்டது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் காணொலி காட்சிமூலம் சசிகலா மீது மறு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அப்போது சசிகலா தான் எந்த குற்றமும் செய்யவில்லை என்று கூறி, அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் குறுக்கு விசாரணை செய்யும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி குறுக்கு விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது. 

பின்னர் நீதிபதி குறுக்கு விசாரணை குறித்து கேள்வி கேட்பதற்காக சசிகலாவை இன்று நேரில் ஆஜர்படுத்த பெங்களூரு சிறை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். இதனை எதிர்த்து சசிகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சசிகலாவை காணொலி காட்சிமூலம் ஆஜர்படுத்தி விசாரணை நடத்த உத்தரவிட்டது. 

அதன்படி சசிகலா இன்று பெங்களூர் சிறையில் இருந்து, எழும்பூர் நீதிமன்ற விசாரணைக்கு காணொலி காட்சிமூலம் ஆஜராகி, நீதிபதியின் கேள்விக்கு பதிலளிப்பார், என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. உயர்நீதிமன்ற உத்தரவு தாமதமாக கிடைத்ததால் காணொலிக்கு ஏற்பாடு செய்ளவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து வழக்கு விசாரணை வரும் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.