ஆட்சியை கைப்பற்றும் என என எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சி, மக்களவை தேர்தலில் வெறும் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்று ஏமாற்றத்தை தந்தது. 

இதனால் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது பதவியை ராஜினாம செய்வதாக அறிவித்தார். இது காங்கிரஸ் கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த ஐந்து நாட்களாக காங்கிரஸ் பிரமுகர்கள் அவரை சமாதானப்படுத்தி வருகின்றனர். ஆனால், ராகுல்காந்தி தனது முடிவில் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

 

இந்நிலையில் சேலம் பச்சப்பட்டி பகுதியை சேர்ந்த  சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான பழனி இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலத்திற்கு சென்றார். அங்கு தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு ராகுல் காந்திக்கு ஆதரவாக முழக்கமிட்டபடி, தீக்குளிக்க முயற்சித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனைக் கண்டு பதறிய போலீசார் தடுத்து நிறுத்தினர். 

பின்னர் இதுகுறித்து பழனி கூறுகையில், ’’இந்திய நாட்டின் மக்களை பாதுகாக்கும் ஒரே தலைவர் ராகுல் காந்தி தான். அரசியல் குடும்பத்திலிருந்து வந்த ராகுல் காந்திக்கு தான் நாட்டின் வளர்ச்சி, நாட்டு மக்களின் தேவை அனைத்தும் தெரியும். எனவே அவர் பதவி விலகக் கூடாது. அவர் தான் தலைவராக நீடிக்க வேண்டும்’’ என வலியுறுத்தினார். இந்த சம்பவத்தால் சேலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.