அதிமுக கூட்டணியில் தேமுதிக இணையுமா? எனத் தெரியவே இன்னும் இரண்டு நாட்களாகும் எனக்கூறி விட்டார் பிரேமலதா. இதோ அதோ என அதிமுகவிற்கு ஊசலாட்டம் காட்டிவரும் தேமுதிகவின் நிலைப்பாடு கேள்விக்குறியாகி வருகிறது. பாஜக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் அடங்கிய குழு தேமுதிக துணைச்செயலாளர் சுதீஷுடன் மோடி தமிழகம் வந்த தினத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. 

அங்கு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த நேரத்தில் திமுகவுடன் கூட்டணி பேசுவதற்கு அக்கட்சியின் நிர்வாகிகளான அனகை முருகேசன், சேலம் இளங்கோவன் ஆகியோரை திமுக பொருளாளர் துரைமுருகனிடம் அனுப்பி வைத்திருந்தார் சுதீஷ். அதற்கு முன்பே துரைமுருகனிடம் சுதீஷும் தொலைபேசியில் பேசியிருக்கிறார். இதற்கிடையே பிரதமர் மோடி பொதுக்கூட்ட மேடைக்கு வரும் நேரம் நெருங்கிவிட்டதால் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், அதிமுக அமைச்சர் தங்கமணி, வேலுமணி சுதீஷிடம் பிறகு பேசுகிறோம் என கூறிவிட்டு சென்றுவிட்டார்கள். இந்தநிலையில் திமுகவோடு தேமுதிக கூட்டணி பேசியது திமுகவின் பொருளாளரான துரைமுருகன் வெளிப்படையாக பத்திரிகையாளர்களை சந்தித்து, என்னிடம் தேமுதிக நிர்வாகிகள் நேரில் வந்து பேசினார்கள், அதற்கு முன் சுதீஷ் போனில் பேசினார். நான் அவர்களிடம் சொன்னது, எங்கள் கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்துவிட்டது. இனி இங்கு இடமில்லை என கூறி அவர்களை அனுப்பிவிட்டேன் என கூறியிருந்தார்.

   

ஏற்கனவே கூட்டணி பேசிவருகிற அதிமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பதற்காக கூட்டணியில் கூடுதல் முக்கியத்துவத்தை கொடுப்பதற்காகவும் இப்படி ஒரு ஸ்டண்டை தேமுதிக நடத்தியுள்ளதை திமுக பொருளாளர் துரைமுருகன் அம்பலப்படுத்தி விட்டார்.  மோடி பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்டு சென்றபிறகு, மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்து சுதீஷ் தனியார் ஓட்டலில் பேசியிருக்கிறார். 

அப்போது அதிமுக நிர்வாகிகள் சுதீஷை பார்த்து காட்டமாக,  ''இந்த வேலையெல்லாம் எங்ககிட்ட காட்டாதீங்க. நீங்க இழுத்த இழுப்பிற்கெல்லாம் நாங்கள் இறங்கி வருகிறோம். நீங்கள் தான் பிடிவாதம் பிடித்து வருகிறீர்கள். அதற்கும் உடன்பட்டு வருகிறோம். இப்படி எங்களுடன் பேசிக்கொண்டே கொல்லைப்புறமாக திமுகவுடன் பேசி கழுத்தை அறுக்கிறீகளா? துரைமுருகனின் வெளியடையான பேச்சு உங்களின் வேஷத்தை அம்பலப்படுத்திவிட்டது. துரைமுருகன் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியது உண்மையில்லை என மறுக்கப்போகிறீர்களா? மக்கள் உங்கள் மீது இருந்த நம்பிக்கையை இழந்து விட்டீர்கள். முதலில் துரைமுருகன் விவகாரத்துக்கு விளக்கம் கொடுங்கள் என அதிமுக நிர்வாகிகள் மட்டுமல்ல பாஜக டெல்லி தலைமையும் சுதீஷை அழைத்து டோஸ் விட்டு இருக்கிறார்கள்.  

அதன் பிறகே தேமுதிக சுதீஷ் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து திமுக பொருளாளர் துரைமுருகனை எங்கள் கட்சியின் நிர்வாகிகள் தனிப்பட்ட முறையில் சந்தித்தார்கள். துரைமுருகனிடம் நான் பேசவே இல்லை என விளக்கம் கொடுத்தார். அதற்கு பதிலடி கொடுத்த  துரைமுருகன் நான் காரில் வரும்போது சுதீஷ் போனில் பேசினார். அக்கட்சியின் நிர்வாகிகள் என்னை நேரில் வந்து பார்த்தார்கள். நான் திமுகவில் இடமில்லை என திருப்பி அனுப்பினேன்.  அய்யோ பாவம் தேமுதிகவின் நிலை பரிதாபமாக உள்ளது என விளக்கமளித்து இருந்தார். மீண்டும் தேமுதிகவை தொடர்பு கொண்ட பாஜக, உங்களது விளக்கம் இன்னும் எடுபடவில்லை. விஜயகாந்தோ, அல்லது பிரேமலதாவையோ இது குறித்து ப்ரஸ் மீட்டை வைத்து திமுகவும் தங்களுக்கும் எந்தவிதமான ஒட்டும் உறவும் இல்லை என வெளிப்படையாக பேட்டியளிக்க வையுங்கள் எனக் கறாராக கூறி இருக்கிறார்கள்.

 

அதனைத் தொடர்ந்தே இன்று செய்தியாளர்களை சந்தித்து துரைமுருகனை போல ஒரு கீழ்தரமான அரசியல்வாதியை பார்த்ததில்லை. மு.க.ஸ்டாலின் எங்களை பலிவாங்க நினைக்கிறார் என்றெல்லாம் கடுமையாக விமர்சித்தார் பிரேமலதா. வலுக்கட்டாயமாக பேட்டி கொடுக்க வைத்ததால்தான் பத்திரிக்கையாளர்களையும் ஒருமையில் திட்டி ஆத்திரத்தை அவர் தீர்த்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. முதலில் கூட்டணிக்காக பாஜக- அதிமுகவை டீலிங் விஷயத்தில் மிரட்டிவந்த தேமுதிக இப்போது திமுகவுடன் பேசிய குட்டு வெளிப்பட்டு விட்டதால் அந்த இருகட்சிகளால் மிரட்டப்பட்டு வருகிறது.