இந்த நாட்டில் அரசு பதவியில் இருக்கும் அரசியல்வாதிகள், மக்களின் வரிப்பணத்தால் நிரம்பி வழியும் கஜானா காசில் எந்தளவுக்கு சுகபோக வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பது உலகமறிந்த சேதி. கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் அரசு நிகழ்வுகளும், முதல்வர்கள்  மற்றும் அமைச்சர்களுக்கு  மிக அதிகமான சலுகைகள் அள்ளிக் கொடுக்கப்படுவதில்லை. ஆனால் தமிழ்நாட்டிலோ நிலைமை தலைகீழ். முதல்வர், துணை முதல்வரில் துவங்கி அமைச்சர்கள் வரை அத்தனை பேருக்கும் ராஜ வாழ்க்கை வாய்த்திருக்கிறது. இது இப்போது மட்டுமல்ல, இந்த ஆட்சியில் மட்டுமல்ல தி.மு.க.வின் ஆட்சியிலும் இதே நிலைதான். முதல்வர் துவங்கி அமைச்சர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளில் மிக முக்கியமானது அவர்களுக்கு ஒதுக்கப்படும் பங்களாக்கள்தான். உயர் ரக பாதுகாப்பும், மிக முழுமையான வசதிகளுடன் கூடிய பங்களாக்கள் இவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. அரசாங்கமே இவர்கள் ஒவ்வொருவரின் பங்களா வாடகையாக எழுபதாயிரம் ரூபாய் அரசுக்கு செலுத்துகிறது. அப்படியானால்  முதல்வர், துணை முதல்வர் மற்றும் எத்தனை அமைச்சர்கள்....அவர்களுக்காக எத்தனை லட்சங்கள் செலவாகின்றன என்பதை கவனியுங்கள். 


சரி ஒரு நபர் அமைச்சராக இருக்கும்போது இப்படி மக்கள் வரிப்பணத்தை எடுத்து அவரது பங்களாவுக்கு வாடகையாக அரசு கொடுப்பதை  ஏற்றுக் கொள்வோம். ஆனால் ஒரு அமைச்சருக்கு பதவி பறிபோய், அவர் மாஜியாகி, இன்று வெறும் எம்.எல்.ஏ.வாக மட்டும் திரியும் நிலையில் உள்ள நபர் இன்னமும் அரசு பங்களாவை அவர் காலி பண்ணாமல் இருக்கிறார். அவர், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக பதவி வகித்து, அதன் பின்  பதவி பறிக்கப்பட்ட டாக்டர். மணிகண்டன் தான்.  பொதுவாக மாஜி அமைச்சர், அந்த பங்களாவை காலி பண்ணை மூன்று மாத காலம் அவகாசம் வழங்கப்படும். அதன் பின் அவர் அங்கே இருக்க கூடாது. ஆனால் மணிகண்டனோ  பதவி பறிபோய் ஆறுமாதம் ஆன பின்னும் அங்கேயே இருக்கிறார். இதுதான் பிரச்னையை கிளப்பியுள்ளது. ’மக்கள் பணத்தில் இப்படி சட்ட விரோதமாக மஞ்சள் குளிக்கிறாரே அமைச்சர்!’ என்று விமர்சனங்கள் வெளுத்தெடுக்கின்றன. 


பிரபல வாரம் இருமுறை அரசியல் புலனாய்வு இதழொன்று இந்த பிரச்னையை சுட்டிக்காட்டியதோடு, மணிகண்டனிடமும் விளக்கம் கேட்டுள்ளது. அதற்கு அவர்....”வழக்கமான கால அவகாசமான முதல் மூன்று  மாதங்கள் முடிந்ததும் அரசு பங்களாவை காலி செய்யப்போவதாக முதல்வரிடம் சொன்னேன். ஆனால் அவரோ ‘வீட்டை காலி செய்ய வேண்டாம். விரைவில் நல்ல செய்தி வரும்!’ என்று சொல்லி அனுப்பினார். அதனால் இந்த மூன்று மாதங்களாக நான் என் சொந்த பணத்தைத்தான் அரசு பங்களாவுக்கு வாடகையாக செலுத்தி வருகிறேன். பிரச்னைகள் தீர்ந்து, மீண்டும் அமைச்சராவேன் எனும் நம்பிக்கையில்தான் அந்த பங்களாவில் குடியிருக்கிறேன்.” என்று சொல்லியிருக்கிறார். 
அப்போ, வாடகை கொடுக்குறதுக்கு ரெடியா இருந்தா யாருக்கு வேணா அரசு பங்களாவை வாடகைக்கு விடுவீங்களா டியர். கவர்மெண்ட்? இந்த விவகாரம் வைரலாகி இருக்கும் நிலையில்,  விதிமுறையை மீறி தான் அரசு பங்களாவில் குடியிருக்க காரணமே முதல்வர் எடப்பாடியார்தான்! என்று அர்த்தம் தெறிக்க மணிகண்டன் பேசியிருப்பது இ.பி.எஸ்.ஸை அப்செட்டாக்கியுள்ளது.