உலக நுகர்வோர் தினமான இன்று ஒவ்வொரு நுகர்வோரும் தெரிந்து கொள்ள வேண்டிய 6 அடிப்படை நுகர்வோர் உரிமைகளை தற்போது பார்க்கலாம்.
உலக நுகர்வோர் உரிமைகள் தினம் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மார்ச் 15 அன்று அனுசரிக்கப்படுகிறது. நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம், பொருட்களின் அளவு, தரம், தூய்மை, ஆற்றல், விலை மற்றும் தரம் பற்றிய போதுமான தகவல்களை நினைவூட்டுவதாக இந்த நாள் திகழ்கிறது.
உலக நுகர்வோர் உரிமைகள் தினம் சந்தையில் நுகர்வோரின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. மேலும் இந்த தினம் நியாயமான மற்றும் நெறிமுறை வணிக நடைமுறைகளின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது, நுகர்வோர் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கு வணிக நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும்.
உலக நுகர்வோர் உரிமைகள் தினம் 2024 கருப்பொருள்
இந்த ஆண்டு, உலக நுகர்வோர் உரிமைகள் தினம் 2024-ன் கருப்பொருள் 'நுகர்வோர்களுக்கான நியாயமான மற்றும் பொறுப்பான செய்றை நுண்ணறிவு (AI) இந்த தீம் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவின் (AI) முக்கியத்துவத்தையும் நுகர்வோர் உரிமைகள் விஷயத்தில் நியாயமான மற்றும் பொறுப்பான AI எதிர்காலத்தை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக்காட்டுகிறது. எனவே, உலக நுகர்வோர் உரிமைகள் தினம் தனியுரிமை மீறல்கள், தவறான தகவல் மற்றும் பாரபட்சமான நடைமுறைகள் போன்ற கவலைகளை முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலக நுகர்வோர் உரிமைகள் தினம் 2024: வரலாறு
மார்ச் 15, 1962 அன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் நுகர்வோர் உரிமைகள் குறித்து உரையாற்றும் போது, உலக நுகர்வோர் உரிமைகள் தினத்திற்கான விதைகளை அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடி விதைத்தார். நுகர்வோர் உரிமைகள் பற்றி உலகத் தலைவர் ஒருவர் பேசுவது இதுவே முதல் முறை. இந்த நாள் முதன்முதலில் மார்ச் 15, 1983 அன்று அனுசரிக்கப்பட்டது, அதன் பின்னர், ஐக்கிய நாடுகள் சபை உலக அளவில் உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை அங்கீகரித்து ஒப்புதல் அளித்துள்ளது. நுகர்வோர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உலக நுகர்வோர் உரிமைகள் தினம் 2024: முக்கியத்துவம்
நியாயமற்ற நடைமுறைகள், பாகுபாடு மற்றும் சுரண்டல் ஆகியவற்றிற்கு இரையாகாமல் நுகர்வோரின் தற்போதைய உரிமைகளை பாதுகாப்பது மற்றும் அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் கொண்டாடப்படுகிறது. உலக நுகர்வோர் உரிமைகள் தினம், மக்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் குறைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதை உறுதிசெய்வது பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஊக்குவிக்கிறது.
உலக நுகர்வோர் உரிமைகள் தினம் 2024: அடிப்படை நுகர்வோர் உரிமைகள்
நுகர்வோர் தாங்கள் வாங்கியதில் மகிழ்ச்சியடையவில்லை என்றாலோ அல்லது போலிப் பொருளைக் கொண்டு ஏமாற்றப்பட்டாலோ குறைகளைத் தீர்ப்பதற்கு சில சட்டப்பூர்வ உரிமைகள் உள்ளன. இந்த உரிமைகள் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு இழப்பீடு வழங்கவும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைத் தடுக்கவும் உதவுகின்றன. ஒவ்வொரு நுகர்வோரும் தெரிந்து கொள்ள வேண்டிய 6 அடிப்படை நுகர்வோர் உரிமைகளை தற்போது பார்க்கலாம்.
பாதுகாப்பு உரிமை
நுகர்வோர் தங்கள் நீண்டகால நலன்களைப் பாதுகாப்பதற்காக சந்தையில் கிடைக்கும் அபாயகரமான பொருட்களிலிருந்து பாதுகாக்கப்படுவதை இந்த உரிமை உறுதி செய்கிறது. உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.. இந்தியாவில் தயாரிப்புகளுக்கான தர மதிப்பெண்கள் இந்திய தரநிலை நிறுவனம் (ISI),தரக்குறியீட்டுக்காக AGMARK, FPO குறி போன்ற குறியீடுகளை வழங்குகிறது.
தகவலறியும் உரிமை
நுகர்வோர் தாங்கள் வாங்கும் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பற்றிய தெளிவான மற்றும் துல்லியமான தகவலைப் பெற உரிமை உண்டு.. இதில் விலை, அளவு, தரம், ஆற்றல், தூய்மை, உற்பத்தி/காலாவதி தேதிகள் மற்றும் வர்த்தக முறைகேடுகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தயாரிப்பின் சாத்தியமான அபாயங்கள் அல்லது பக்க விளைவுகள் போன்ற விவரங்கள் அடங்கும்.
தேர்வு செய்யும் உரிமை
சந்தையில் நியாயமான விலையில் வழங்கப்படும் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளில் இருந்து சுதந்திரமாக தேர்வு செய்வது நுகர்வோரின் உரிமையாகும்.
புகார் அளிக்க உரிமை
தாங்கள் விரும்பாத தயாரிப்புகள் அல்லது சேவைகள் தொடர்பான தங்கள் கவலைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க நுகர்வோருக்கு உரிமை உண்டு. அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார்களை பதிவு செய்யலாம், மேலும் முறையான பரிசீலனையுடன், அவர்கள் அவ்வாறு செய்ய பொருத்தமான மன்றம் வழங்கப்படும்.
இழப்பீடு பெற உரிமை
நுகர்வோரின் உரிமைகள் மீறப்பட்டால், இழப்பீடு அல்லது முறையான தீர்வைப் பெற அவர்களுக்கு உரிமை உண்டு.
நுகர்வோர் கல்விக்கான உரிமை
சட்டப்பூர்வ உரிமைகளைப் பற்றி அறிந்து கொள்வது வாடிக்கையாளரின் கடமை ஆகும்.. எனவே, நுகர்வோர் கல்விக்கான உரிமையானது பொருத்தமான திறன்களையும் அறிவையும் பெறுவதை உள்ளடக்குகிறது. இது நுகர்வோருக்கு தகவல் தெரிவிப்பதற்கும் நியாயமற்ற நடைமுறைகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் அதிகாரமளிக்கிறது.
