ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்துக்கும் உங்களுக்கு அதிகமாக கோபம் வருவதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட சிலர் அதிகமாக கோபப்படுகிறார்கள். அந்த கோபத்தால் அவர்கள் மன அமைதியை மட்டுமல்ல பலவற்றையும் இழக்கிறார்கள். கோபத்தில் இருக்கும் போது கூட பிறர் சொல்லும் அறிவுரைகள் கூட காதில் ஏறாது. மேலும் கோபத்தில் பேசும் வார்த்தைகள் கூட பிறரை காயப்படுத்திவிடும். எப்போதுமே சிடுசிடுவென கோபத்துடன் இருப்பதற்கான காரணத்தை அறிந்து கொண்டால் அதை சுலபமாக கட்டுப்படுத்திவிடலாம். எனவே, இந்த பதிவில் சின்ன சின்ன விஷயத்திற்கு கூட அதிகமாக கோபம் வருவதற்கான காரணங்கள் மற்றும் அதற்குரிய தீர்வுகள் என்ன என்பது குறித்து தெரிந்துகொள்ளலாம்.
சின்ன சின்ன விஷயங்களுக்கு அதிகமாக கோபம் வருவதற்கான காரணங்கள் :
ஏமாற்றங்கள் :
சிலருக்கு அவர்களுடைய லட்சியங்கள் அடைய முடியாமல் போனாலோ அல்லது அவர்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் இருந்தாலோ ஏமாற்றம் ஏற்படும். அவர்களால் அந்த ஏமாற்றத்தை சமாளிக்கவும், தாங்கிக் கொள்ளவும் தெரியாமல் தான் அதை கோபத்தின் மூலம் வெளிப்படுத்துகிறார்கள். எனவே, அவர்கள் எதிர்பார்ப்புகள், இலட்சியம் என்ன என்பதை அறிந்து, அதை பூர்த்தி செய்தால் ஏமாற்றமடைய மாட்டார்கள். வீணாக கோபப்படவும் மாட்டார்கள்.
விரக்தி :
நமிபிக்கை இழந்த ஒரு நிலைதான் விரக்தி ஆகும். நேசித்த ஒருவர் மீது நம்பிக்கை இழக்கும் போது தான் விரக்தி ஏற்படும். விரக்தியைப் போக்க தினமும் தியானம் செய்யுங்கள். இதுதவிர, பிடித்த புத்தகங்களை படியுங்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து சுற்றுலா அல்லது வெளியே சென்று அவர்களுடன் சேர்ந்து நாளை மகிழ்ச்சியாக செலவழியுங்கள். இதனால் மன அமைதியாகும்.
விமர்சனங்கள்
சிலருக்கு தன்னை யாராவது எதிர்மறையான கருத்துக்களை சொன்னால் உடனே கோபம் வந்துவிடும். பிறர் இவர்களை குறித்து விமர்சனத்தை ஒருபோது விரும்ப மாட்டார்கள். எரிமலை அக்கினி கக்குவது போல கோபத்தை உடனே கக்குவார்கள். எனவே, இப்படிப்பட்டவர்களிடம் அவர்களைப் பற்றி தேவையில்லாமல் விமர்சனங்கள் சொல்லுவதைத் தவிர்த்து விடுங்கள்.
எரிச்சல் :
எதற்கெடுத்தாலும் எரிந்து எழுந்து விழுபவர்களை கையாளுவது ரொம்பவே கடினம். எந்தவித செயலுக்கும் அவர்கள் உடன் படவே மாட்டார்கள். இப்படிப்பட்டவர்கள் நிதானமாக சிந்தித்து ஏன் நமக்கு எரிச்சல், கோபம் வருகிறது? என்று சிந்திக்க வேண்டும். இதுக்கு தான் எரிச்சல் பட்டோமா? என்று புரிந்து கொண்டால் கோபமும், எரிச்சலும் தேவையில்லாமல் வராது.
வேலையில் மன அழுத்தம்
வேலையில் மன அழுத்தம் ஏற்படுவதற்கு காரணம் கிண்டல், கேலி, அதிகாரியின் அதிருப்தி, வேலை பளு போன்றவை காரணமாகும். இந்த மன அழுத்தத்தை போக்க சூப்பரான சொலுஷன் ஜில்வாட்டரில் ஒரு குளியல் போட்டுட்டு, வயிறு முட்ட சாப்பிட்டு, குட்டி தூக்கம் போட்டாலே போதும் மன அழுத்தம் ஏறின வேகத்தில் இறங்கி விடும்.
பொருளாதார பிரச்சினை
சில சமயங்களில் சிலருக்கு பொருளாதார பிரச்சினை காரணமாகவும் கோபம் வரும். பணப்பற்றாக்குறை, அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய என்ன செய்வது என்ற பதட்டமான சூழ்நிலை காரணத்தால் கோபம் உண்டாகும். இதற்கு சிக்கனத்தை கடைப்பிடிப்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.
கோபத்தை குறைக்க ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுங்கள். ஓவியம், பாடுதல், புத்தகங்கள் தேடி தேடி படித்தது போன்ற உங்களுக்கு பிடித்தமான ஏதேனும் ஒரு விஷயத்தில் மனதை செலுத்துங்கள். இப்படி செய்வதன் மூலம் கோபம் தானாகவே குறைந்து விடும்.
