சிலருக்கு அதிகமாக சாப்பிடும் பழக்கம் இருக்கும். இன்னும் சிலர் உணவு, ஸ்நாக்ஸ் என ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பதையே முழு நேர வேலையாக வைத்திருப்பார்கள். இது போல் அதிகம் சாப்பிடும் பழக்கம் உங்களுக்கும் இருந்தால் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு சில மோசமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதிகமாக சாப்பிடுவது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், அது எந்த மாதிரியான ஆபத்துகளை ஏற்படுத்தும் என்று உங்களுக்குத் தெரியுமா?
அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பல்வேறு உடல்நல பிரச்சனைகள்:
உடல் பருமன்:
அதிகமாக சாப்பிடுவதால் உடலில் அதிகப்படியான கலோரிகள் சேர்கின்றன. இந்த கலோரிகள் எரிக்கப்படாவிட்டால், அவை கொழுப்பாக மாறி உடலில் சேமிக்கப்படுகின்றன. இது உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது. உடல் பருமன் பல நோய்களுக்கு முக்கிய காரணமாக அமைகிறது.
இதய நோய்கள் :
கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால் இரத்தத்தில் கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. இது தமனிகளில் கொழுப்பு படிந்து அடைப்பை ஏற்படுத்தலாம். இதனால் இரத்த ஓட்டம் தடைபட்டு மாரடைப்பு, பக்கவாதம் போன்ற இதய நோய்கள் வரலாம்.
நீரிழிவு நோய் :
இனிப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக உட்கொள்வதால் இரத்ததில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. நாளடைவில் இது இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்தி டைப் 2 நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும்.
உயர் இரத்த அழுத்தம் :
அதிகமான உப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வது உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். உயர் இரத்த அழுத்தம் இதய நோய், சிறுநீரக நோய் மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகளுக்கு காரணமாக அமையும்.
செரிமான பிரச்சனைகள் :
அதிகமாக சாப்பிடுவதால் செரிமான அமைப்பு அதிகமா வேலை செய்ய தூண்டுகிறது. இதனால் வயிறு உப்புசம், நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் மற்றும் பிற செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
மேலும் படிக்க: காரசாரமான வெற்றிலை துவையல் செய்வது எப்படி?
தூக்கமின்மை :
இரவு நேரத்தில் அதிகமாக சாப்பிடுவதால் செரிமானத்திற்கு அதிக நேரம் எடுக்கும் அதனால் உடல் அமைதியடையாமல் தூக்கம் வருவது தாமதமாகலாம் அல்லது தூக்கம் கலைந்து போகலாம் இதனால் தூக்கமின்மைக்கு வழிவகுக்கும்.
மன அழுத்தம் மற்றும் பதட்டம் :
சிலர் மன அழுத்தம் அல்லது பதட்டத்தை சமாளிக்க அதிகமாக சாப்பிடுகிறார்கள். ஆனால், இது ஒரு தற்காலிக நிவாரணத்தை மட்டுமே அளிக்கிறது. உண்மையில், அதிகமாக சாப்பிடுவது உடலில் ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தி மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை அதிகரிக்கலாம்.
சோர்வு :
அதிகமாக சாப்பிட்ட பிறகு உடல் உணவை செரிமானம் செய்ய அதிக ஆற்றலை செலவிடுகிறது. இதனால் மற்ற உடல் செயல்பாடுகளுக்கு போதுமான ஆற்றல் இல்லாமல் சோர்வாக உணரலாம். குறிப்பாக கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை அதிகமாக சாப்பிடும்போது இந்த சோர்வு அதிகமாக இருக்கும்.
பித்தப்பை பிரச்சனைகள் :
அதிகமாக கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வது பித்தப்பையில் கற்கள் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது.
சில வகையான புற்றுநோய்கள்:
உடல் பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதிகமாக சாப்பிடுவதை எப்படி தவிர்ப்பது?
- சரியான நேரத்தில் உணவுகளை உண்ணுங்கள்.
- உணவுகளைத் தவிர்க்காதீர்கள்.
- சத்தான மற்றும் சமச்சீரான உணவுகளை உட்கொள்ளுங்கள்.
- மெதுவாகவும், நன்கு மென்றும் சாப்பிடுங்கள்.
- உணவின் இடையே தண்ணீர் நிறைய குடியுங்கள்.
- உட்கார்ந்து சாப்பிடுங்கள், சாப்பிடும்போது டிவி பார்ப்பது அல்லது வேறு வேலைகள் செய்வது போன்ற கவனச்சிதறல்களைத் தவிருங்கள்.
- உணவுக்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது பசியைக் குறைக்க உதவும்.
- மன அழுத்தம் அல்லது உணர்ச்சிவசப்படும்போது சாப்பிடுவதைத் தவிருங்கள். அதற்கு பதிலாக உடற்பயிற்சி அல்லது உங்களுக்கு பிடித்தமான வேறு செயல்களில் ஈடுபடுங்கள்.
- போதுமான அளவு தூங்குங்கள். தூக்கமின்மை பசியை அதிகரிக்கும் ஹார்மோன்களைத் தூண்டலாம்.
- சிறிய தட்டுகளில் உணவை பரிமாறுங்கள்.
- வாரத்திற்கு ஒரு முறையாவது உங்கள் எடையை சரிபாருங்கள்.
மேலும் படிக்க: வேற லெவல் சுவையில் வேர்க்டலை-புதினா சட்னி செய்யலாமா?
முக்கியமாக கவனிக்க வேண்டியவை:
- ஒவ்வொருவரின் உடல்நிலையும் வித்தியாசமானது. அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடலாம்.
- ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடுவதை விட, நாள் முழுவதும் சிறிய அளவிலான உணவுகளை உட்கொள்வது நல்லது.
- பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள் மற்றும் அதிக சர்க்கரை கொண்ட பானங்களைத் தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.
- நார்ச்சத்து நிறைந்த உணவுகள், பழங்கள் மற்றும் காய்கறிகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது செரிமானத்தை மேம்படுத்த உதவும்.
- தவறாமல் உடற்பயிற்சி செய்வது கலோரிகளை எரிக்கவும், உடல் எடையை கட்டுக்குள் வைக்கவும் உதவும்.
