வேலை பார்க்கும் மும்முரத்தில் மதிய உணவை தவிர்க்கும் நபர்கள் எவ்வளவு பெரிய தவறை செய்கிறார்கள் என நிபுணர்கள் விளக்குவதை இந்தப் பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.

பல்வேறு காரணங்களுக்காக மக்கள் மதிய உணவை தவிர்க்கிறார்கள். அதில் வேலை செய்யும் ஆர்வத்திலும், அழுத்ததிலும் மதிய உணவை தவிர்ப்பவர்கள் ஏராளம். இது தொடர்ந்து செய்யப்படும்போது உங்களுடைய ஆரோக்கியத்தில் மிகப்பெரிய பிரச்சனையை உண்டு பண்ணலாம்.

மூளை உணவு என சொல்லப்படும் காலை உணவை தவிர்த்து காபி அல்லது டீ குடிப்பது, அப்படியே வேலைக்கு சென்று அங்கும் மதிய உணவை தவிர்த்து வேலையில் ஈடுபடுவது மோசமான பழக்கம். இதனால், நீங்கள் வேலையில் கெட்டிக்காரராக பெயர் வாங்கலாம். ஆனால் உடல்நலத்தை கவனித்துக் கொள்வதில் பூஜ்யமாகி விடுவீர்கள். தொடர்ந்து இப்படி இருந்தால் உடலுக்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது.

மதிய உணவு சாப்பிடாததால்...

நாள் முழுவதும் இயங்க தேவையான ஆற்றல், ஒருமித்த கவனம் இதற்கெல்லாம் உடலுக்கு ஆற்றல் தேவை. இதற்கு சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும். இது உங்களை பலவீனமாக்கும். இதன் காரணமாக தலைச்சுற்றல், எரிச்சல், கவனச் சிதறல் வரலாம். சரியான நேரத்தில் சாப்பிடாதவர்களுக்கு பல உடல்நலக் கோளாறுகள் வருகின்றன. அதில் அதிக கோபம், சோம்பல், பதட்டம், முடிவெடுப்பதில் சிக்கல் போன்றவையும் அடங்கும். இதற்கு மூளைக்கு போதுமான ஆற்றல் கிடைக்காதது தான் காரணம்.

டேஞ்சர்

உடலை பராமரிக்க ஹார்மோன் சமநிலை அவசியம். சரியாக சாப்பிடாவிட்டால் ஹார்மோன் சுரப்பில் ஏற்றத்தாழ்வு வரும். நோய் எதிர்ப்பு சக்தி பாதிப்படையும். மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் அதிகமாக சுரந்து உங்களை பதட்டத்திலேயே வைத்திருக்கும். மனச்சோர்வு ஏற்படும். வளர்சிதை மாற்றமும் மெதுவாகி, நாளடைவில் பல நோய்களுக்கு ஆளாவீர்கள். செரிமானக் கோளாறு, நீரிழிவு நோய், இதய பிரச்சனைகள் ஆகியவை வருவதற்கு சரியாக சாப்பிடாததும் ஒரு காரணமே. இதுவே துரித உணர்வுகளின் மீது ஆர்வத்தைத் தூண்டும்.

என்ன செய்யலாம்?

  • முந்தைய நாளின் இரவில் மறுநாளைக்கான உணவினை திட்டமிட வேண்டும். முடிந்தவரை தயார் செய்தும் வைக்கலாம். நட்ஸ், பழங்கள், ஸ்மூத்தி போன்றவற்றையாவது உண்ண வேண்டும்.
  • ஒருவேளை மதிய உணவை சாப்பிட தாமதமாகும் அல்லது நேரமில்லை என்றால் கைப்பிடி அளவு நட்ஸ்கள், ஏதேனும் பழங்களைச் சாப்பிட்டு ஆரோக்கியமான முறையில் ஆற்றலை பெறுங்கள். வெறும் வயிற்றில் டீ அல்லது காபியை தவிர்க்கவும்.
  • சோர்வுக்கு பசி மட்டுமல்ல; தாகமும் காரணமாக இருக்கலாம். நிறைய தண்ணீர் குடியுங்கள். சரியான இடைவெளியில் உணவுகளை எடுத்துக் கொள்வது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதனால் வேலையில் கவனம் மேம்படும்.
  • எவ்வளவு வேலை இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு செய்வது நலம். நாம் வாழத் தான் வேலை செய்கிறோம். அதனால் சாப்பிட்டு செய்தால் போதுமானது.