அத்தி பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டது. குளிர்காலத்தில் அதனுடன் சில பொருள்களை சேர்த்து சில உணவுகளை சாப்பிட்டால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

அத்தியை லட்டு வடிவில் சாப்பிடுவது அதிக நன்மைகளைத் தரும். குளிர்காலத்தில் இந்த லட்டு உடலை உள்ளிருந்து சூடாக வைத்திருக்குமாம். இரத்த சோகை, செரிமானக் கோளாறு, மலச்சிக்கல், குடல் ஆரோக்கியம், தசை ஆரோக்கியம், எடை கட்டுப்பாடு, தோல், முடி ஆரோக்கியத்திற்கு இந்த லட்டு உதவுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் இந்த சுவை பிடிக்கும். குளிர்காலத்தில் தினமும் ஒரு லட்டு சாப்பிட்டால் பல நோய்களிலிருந்து நம்மை தற்காத்து கொள்ளலாம். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

தேவையானவை

இந்த லட்டில் அத்திப்பழம் மட்டுமின்றி பல்வேறு பொருள்களும் சேர்ப்போம். அவையும் பல சத்துக்களை கொண்டது. பேரீச்சம்பழம், பொடித்த பாதாம், அதே அளவு பிஸ்தா, வால்நட்ஸ், நெய், வாசனைக்காக 1 ஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்க்க வேண்டும். அத்திப்பழம் 10 முதல் 15 துண்டுகள் போட்டால் போதும்.

அத்தி லட்டு செய்முறை

பத்து முதல் 15 நறுக்கிய அத்திப்பழம், ஒரு கப் நறுக்கிய பேரீச்சம்பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் அடி கனமான ஒரு வாணலியை வையுங்கள். வாணலி சூடானதும் நெய் 2 ஸ்பூன் விடுங்கள். பின்னர் கால் கப் அளவில் பொடித்த பாதாம், பிஸ்தாவை சேர்க்கவும். 2 ஸ்பூன் உடைத்த வால்நட்ஸ், முந்திரியை சேர்த்து கொஞ்ச நேரம் நெய்யில் வதக்க வேண்டும்.

சிறிது நேரம் கழித்து இதனுடன் நறுக்கிய அத்திப்பழம், பேரீச்சம்பழத் துண்டுகளை போட்டு, அவை மென்மையாகும் வரைக்கும் சமைக்க வேண்டும். இதை 4 முதல் 5 நிமிடங்கள் கிளறினால் போதும். இதனுடன் நறுக்கிய உலர் பழங்கள், ஏலக்காய்த் தூளைப் போட்டு கிளறி இறக்கிவிடுங்கள். இந்த கலவை ஆறிய பின் உங்கள் கைகளில் நெய் தடவி சிறிய லட்டுகளாக செய்ய வேண்டும்.

உலர்ந்த அத்திப்பழம், பேரீச்சம்பழம் வைத்து செய்வதால் இயற்கை இனிப்பாக இருக்கும். இதற்கென தனியே இனிப்பு சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நட்ஸ் ஆகிய உலர் பழங்களுடன் அத்திப்பழம் சேர்வதால் சுவையும் தரமும் அருமையாக இருக்கும். காலையில் இதை உண்பதால் புத்துணர்ச்சியும், ஆற்றலும் கிடைக்கும்.