இன்றைய வேலை சூழல், வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக இரவில் தாமதமாக தூங்குவது பெரும்பாலானவர்களின் பழக்கமாகி விட்டது. இந்த பழக்கம் தினசரி தொடர்ந்தால் எந்த மாதிரியான உடல் பாதிப்புக்கள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காக இது போன்ற பழக்கங்களை மாற்றுவத அவசியமானதாகும்.
உறக்கம் உடல் ஆரோக்கியத்திற்கும், மன ஆரோக்கியத்திற்கும் மிக முக்கியமான ஒன்றாகும். மனிதர்களின் உடல் இயற்கையாகவே 24 மணி நேரக் கடிகாரத்திற்கேற்ப (Circadian Rhythm) இயங்குகிறது. இதனை மீறி, இரவு நேரங்களில் தாமதமாக உறங்குவது பல்வேறு ஆரோக்கியப் பிரச்சனைகளை உருவாக்கக்கூடும். சிலர் வேலை காரணமாகவும், சிலர் பொழுதுபோக்காகவும், சிலர் மனஅழுத்தத்தாலும் இரவு நேரங்களில் தாமதமாக உறங்குவதை வழக்கமாக்கிக் கொள்கிறார்கள். ஆனால், இந்த பழக்கம் பல கடுமையான நோய்களை தூண்டக்கூடியது. இரவில் தாமதமாக தூங்கும் பழக்கம் உங்களுக்கும் இருக்கிறது என்றால், அது உங்களுக்கு எந்தெந்த நோய் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.
இருதய நோய்கள் :
இரவு நேரங்களில் ஒழுங்கற்ற உறக்கம் இதயத்தின் செயல்பாட்டைக் குறைக்கிறது. போதிய அளவு உறங்காததால், இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதயத்திற்கான அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால், மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் போன்ற ஆபத்துக்கள் உருவாகலாம்.
நீரிழிவு நோய் :
தாமதமாக உறங்குபவர்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு அதிகரிக்கின்றது. இது உடலில் சர்க்கரை அளவை சரியாக கட்டுப்படுத்த முடியாமல், நீரிழிவு (டைப் 2 டையபடீஸ்) நோயை உருவாக்கும்.
மனநல பாதிப்புகள் :

தொடர்ச்சியாக இரவு உறக்கத்தில் குறைவு ஏற்படுவதால், மன அழுத்தம், கவலை, ஏமாற்ற உணர்வு மற்றும் மனச்சோர்வு (டிப்பிரஷன்) போன்ற பிரச்சனைகள் உருவாகின்றன. இது நினைவாற்றல் மற்றும் கவனக்குறைவை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.
புற்றுநோய் :
உறக்க முறையின் தடங்கலால் உடலின் செல்கள் சரியாக பணியாற்ற முடியாமல் போகின்றன. குறிப்பாக, இரவுப் பணி செய்பவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் மற்றும் குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகமாகும்.
எடை அதிகரிப்பு :
இரவு நேரங்களில் கண் விழிக்க வேண்டும் என்பதற்காக அதிக உணவுகள் சாப்பிடும் பழக்கம் ஏற்படும். இதனால், உடல் பருமன் மற்றும் மெடபாலிசம் குறைவு ஏற்படும். உடலில் கூடுதல் கொழுப்புகள் சேமிக்கப்படுவதால், ஒழுங்கற்ற நீரிழிவு, இருதய நோய்கள், மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவு :
போதிய உறக்கம் இல்லாமல் இருப்பதால் உடல் நோய் எதிர்ப்பு சக்தியை இழக்கிறது. இது உடலை தொற்று நோய்கள் எதிதில் பாதிக்கும் தன்மை ஏற்படுத்தும். சாதாரண காய்ச்சலிலிருந்து தீவிர வைரஸ் நோய்கள் வரை எளிதாக தாக்கக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தும்.
செரிமான கோளாறுகள்
சேரோட்டோனின் மற்றும் மெலட்டோனின் ஹார்மோன்களின் சமநிலை பாதிக்கப்படுவதால், உணவு செரிமானத்தை குறைக்கும் வாய்ப்பு அதிகமாகும். இதனால், அஜீரணம், குடல் பிரச்சனைகள் மற்றும் அமிலத்தன்மை போன்றவை அதிகரிக்கலாம்.
தீர்வு என்ன ?
* உறக்க ஒழுங்குமுறையைப் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் படுக்க செல்லும் பழக்கம் உருவாக்கவும்.
* மொபைல் மற்றும் கணினி ஒளியைக் குறைக்கவும். தூங்கும் முன் ப்ளூ லைட் பாதிப்பைத் தவிர்க்கவும்.
* சாப்பாட்டை சரியான நேரத்தில் சாப்பிடவும். இரவு உணவை மிகக் குறைவாக எடுத்துக் கொள்ளவும்.
* மன அமைதிக்கான பயிற்சிகள் செய்யவும். தியானம், யோகா போன்றவை உறக்கத்தை மேம்படுத்தும்.
* உடற்பயிற்சி செய்யவும். தினமும் உடல் இயக்கம் இருப்பது உறக்கத்தை மேம்படுத்தும்.
* இரவில் அமைதியான இசை கேட்பது, உணவிற்கு பிறகு சிறிது தூரம் வாக்கிங் செல்வது, எளிமையான உடற்பயிற்சிகளை செய்வது ஆகியவை விரைவில் தூங்க சிறந்த வழிகளாக இருக்கும்.
