அனைத்து பெற்றோரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை இந்தப் பதிவில் காணலாம்.

குழந்தை வளர்ப்பு என்பது சவாலான விஷயம். குழந்தைகளை ஒழுக்கமுள்ள நல்ல குழந்தைகளாக வளர்க்க வேண்டும் என்றே ஒவ்வொரு பெற்றோரும் விரும்புகின்றனர். அதற்காக குழந்தைகளிடம் சில நேரம் கண்டிப்புடனும், கறாராகவும் நடந்துகொள்கின்றனர். என்னதான் பெற்றோர் முயன்றாலும் அவர்களுக்கு குந்தைகளை பற்றி தெரியாத சில விஷயங்கள் உள்ளன. குழந்தைகள் வளர வளர அவர்களுடைய உலகம் பெற்றோரின் கண்ணுக்கு தெரியாமல் மாறிவிடுகிறது. குழந்தைகளை பற்றி பெற்றோர் தங்களுக்கு அனைத்தும் தெரியும் என நினைக்கிறார்கள். ஆனால் குழந்தைகள் வளரும் போது அவர்கள் பெற்றோருக்கு தெரியாத பல விஷயங்களை தெரிந்து கொள்கிறார்கள். இங்கு பெற்றோர் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அதிர்ச்சியூட்டும் சில விஷயங்களை காணலாம்.

கவனச்சிதறல்

குழந்தைகள் தங்களுடைய படிப்பில் கவனம் செலுத்தாமல் இருப்பது சோம்பேறித்தனத்தால் அல்ல. டிஜிட்டல் சாதனங்கள் அவர்களுடைய மூளையை மாற்றுவது ஒரு காரணம். அதிகமான ஸ்மார்ட்போன் பயன்பாடு, வீடியோ கேம்கள் போன்றவற்றில் குழந்தைகள் மூழ்கி விடுவதால் அவர்களுக்கு உடனடி திருப்தி கிடைக்கிறது. இப்படி சின்ன சின்னதாக கிடைக்கும் திருப்திக்கு பழகி விடுவதால் மற்ற விஷயங்களில் அவர்கள் கவனம் செலுத்துவதில்லை. நீண்ட நேரம் செய்யக்கூடிய எந்த செயலையும் குழந்தைகள் செய்வதற்கு விரும்புவது கிடையாது. அதனால்தான் சில குழந்தைகள் படிக்க கூட விரும்பமாட்டார்கள்.

திரைநேரம் டேஞ்சர்

அதிகமாக டிவி பார்க்கும் குழந்தைகளும், செல்போன் பயன்படுத்தும் குழந்தைகளும் எதிலும் ஆழமான கவனம் செலுத்துவது கிடையாது. இது ஆரம்ப காலகட்டத்தில் சாதாரணமாக தோன்றினாலும் நாளடைவில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த மாதிரி குழந்தைகள் உணர்ச்சிரீதியாக எந்த பிணைப்பும் ஏற்படுத்த மாட்டார்கள். அவர்களுக்கு நேரம், கல்வி, உறவுகளின் மதிப்பு தெரிவதில்லை. உணவும், செல்போனும் போதும். வேறு விஷயங்களில் கவனமே வராது.

ஏன் குழந்தைகள் இப்படி மாறுகிறார்கள்?

குழந்தைகள் இப்படி மாறுவது அவர்களுடைய தனிப்பட்ட தவறு கிடையாது. ஆனால் இந்த விஷயங்கள் அடிக்கடி தொடரும்போது அவர்களின் எதிர்காலமே பாதிக்கக்கூடிய வாய்ப்புள்ளது. எதிலும் ஆர்வம் இல்லாதவர்களாக மாறிவிடுவார்கள். அதிகமாக வீடியோக்களில் மூழ்குவது, ஆன்லைனில் கேம் விளையாடுவது என நேரம் செலவழிக்கும் குழந்தைகள் அதில் வெறித்தனமாக மாறிவிடுகிறார்கள். இதற்கு அவர்களுடைய ஆர்வம் மட்டும் காரணம் கிடையாது. மூளையில் உள்ள உடனடி திருப்தி அளிக்கக்கூடிய டோபமைன் அமைப்பும் காரணம்.

ஒவ்வொரு முறையும் செல்போனை பயன்படுத்தும்போது அதில் பார்க்கும் வீடியோக்கள், விளையாடும் கேம்கள் குழந்தைகளின் மூளையில் உள்ள டோபமைன் என்ற ஹார்மோனை சுரக்க செய்கிறது. இது உடனடியாக அவர்களுக்கு சிற்றின்பத்தை அளிக்கும். இந்த திருப்தி உணர்வுக்காகவும், கூடுதலான இன்பத்திற்காகவும் மீண்டும் மீண்டும் கேம், வீடியோக்களில் மூழ்குகிறார்கள் குழந்தைகள். இது போதைப் பழக்கம் போன்றதுதான். இந்தப் பழக்கத்தை விரைவில் மாற்ற வேண்டும்.

எப்படி தடுக்க வேண்டும்?

இதைத் தடுக்க பெற்றோர் தங்களுடைய குழந்தைகளுக்கு திரை நேரத்தை குறைக்க வேண்டும். அதாவது அவர்கள் செல்போன், பிற டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தும் நேரத்தை குறைப்பதே இதற்கு தீர்வாக அமையும். வீட்டிற்கு வெளியில் சென்று விளையாடும் கபடி, கால்பந்து போன்ற விளையாட்டுகளில் குழந்தைகளை ஈடுபடுத்தலாம். குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் செல்போன் கொடுப்பதை மாற்றி அமைக்கலாம். அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதை கண்டிப்பதே இதற்கு வழியாக அமையும்.