கணவன் குடிப்பது, புகை பிடிப்பது, வேறு பெண்களுடன் உறவு வைத்துக்கொள்வது மட்டும் மனைவியின் மனநிலையைப் பாதிப்பதில்லை. கணவர்களின் அன்றாடச் செயல்கள், பழக்க வழக்கங்கள் கூட வேதனைப்படுத்தும் வகையில் அமைந்துவிடுவதாக பெண்கள் கூறுகின்றனர். ஆண்களின் மனோபவம் சார்ந்து அவர்களுக்கு தவறு என்று தோன்றாத ஆனால் பெண்களின் மனதைப் பாதிக்கும் சில செயல்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. இந்தத் தவறுகளை செய்கிறோமா என்று சரிபார்த்துக்க்கொள்ளவும், அவ்வாறு எதுவும் இல்லையென்றால் தங்களுக்கு தாங்களே முதுகில் தட்டிக்கொடுத்துக்கொள்ளவும் இதனைப் படிப்பது ஒரு வாய்ப்பாக அமையும்.
 
உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட வெளி நபர்களின் முன்னிலையில் மனைவியை கேலி கிண்டல் செய்வது என்ற பெயரில் எல்லை மீறி நகைப்பதா? இதன் மூலம் மனைவியை அவமானப்படுத்துகிறோம் என்பதையோ, அப்போது மனைவியின் மனவலியையோ பலர் புரிந்துகொள்வதுமில்லை, பொருட்படுத்துவதுமில்லை. அதன் பிறகு கணவன் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் கேலி கிண்டல் என்ற தொனியிலேயே மனைவி எடுத்துக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். 
 
மனைவியரும் வேலைக்கு செல்வதை கட்டாயமாக்கியிருக்கிறது. அவர்களுக்கும் வேலைப் பளு, அழுத்தம் குடைச்சல் தலைவலி எல்லாம் இருக்கிறது. ஆனால் அலுவலகம் முடிந்து வந்துவிட்டால் உடனடியாக வழக்கமான குடும்பத் தலைவியாக மாறி வீட்டு வேலைகளைக் கவனிக்கத் தொடங்கிவிட என்பது ஆண்களின் மனோபாவமாக இருக்கிறது என்பது மனைவியரின் குறை. மனைவி என்ன எந்திரன் பாணி சிட்டி ரோபாட்டா என்ன சிப்பை மாற்றிக்கொண்டு உடனுக்குடன் மாற? மன அழுத்தம் மாற வேண்டுமானால முதலில் ஒருசில வார்த்தைகளையாவது மனைவியிடம் ஆசையாக பேசுவதே ஏற்புடையதாக இருக்கும்.

குறிப்பிட்ட விஷயத்தைக் குறித்து மனைவி என்ன சொல்ல வருகிறார் என்று கூட புரிந்துகொள்ளாமல் தானாக ஒன்றைப் புரிந்துகொண்டு காட்டுக் கத்தல் போடும் ஆண்கள், பின்னர் தங்களை தவறை உணரும்போது வெறும் சாரி என்று ஒற்றை வார்த்தையில் முடித்து விட்டுச் சென்றுவிடுவார்கள். கொட்டித் தீர்த்து மனைவியின் மனதைப் பதம் பார்த்த அத்தனை வார்த்தைகளையும் சாரி என்ற ஒற்றை வார்த்தை அழித்துவிடுமா என்ன? அது எரியும் நெருப்பில் கொட்டப்படும் எண்ணெயாகவே மனைவிக்கு வேதனையை ஏற்படுத்தும் என்பதைக் கூட இத்தகைய ஆண்கள் புரிந்துகொள்ள்வோ, பொருட்படுத்தவோ விரும்புவதில்லை. 

திருமணம் ஆகிவிட்டால் உடனடியாக குழந்தை உண்டாகிவிட வேண்டும் என்பது சமூக அழுத்தத்துடன் கூடிய வலியுறுத்தலாகவே இருக்கிறது. அதற்கு மனைவியை வற்புறுத்தும் கணவர்கள் மனைவியின் உடலும் மனமும் அப்போதைய சூழலுக்கு ஏற்புடையதாக உள்ளதா என கருதுவதில்லை. மனைவி விரும்பும் அவகாசத்தை அளிக்காமல் கலவிக்கு கட்டாயப்படுத்துவது நரக வேதனை என்கின்றனர் பெண்கள்.

சிலநேரங்களில் பெண்களுக்கு கரு கலைந்துவிடும். அதுவே பெரிய கொடுமை என்றால், அதைச் சார்ந்து அமையும் ஆண்களின் அணுகுமுறை அதைவிடக் கொடுமை என்கின்றனர் பெண்கள். அபார்ஷன் ஆன பின் குறிப்பிட்ட காலம் வரை ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்துவது உண்டு. கணவன் அதைக் கணக்கு வைத்துக்கொண்டு ஒரு மாதம், ஒருவாரம் என்று நினைவுறுத்துவது, அதன்பிறகு தங்கள் ஆசைக்கு இணங்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் அழுத்தம் மனதில் ரணத்தை ஏற்படுத்துவதாகவும் கூறுகின்றனர். பெண்கள் பாலுறவுக்காக தயாரிக்கப்பட்ட பொம்மையா என்ன?

சிலநேரங்களில் வேறு எங்கோ இருக்கும் கோபத்தை தங்களிடம் காட்டி கணவர்கள் மோசமாகத் திட்டும் போது அதையும் தாங்கிக் கொண்டு அதன் பிறகும் அவர்களுக்கு பணிவிடைகளைச் செய்வதும், இரவில் இணங்கிப் போவதும் தன்மானம் சார்ந்த மிகப்பெரிய வலி. செருப்பால் அடித்துச் சோறு போடுவது என்பதற்கு மாறாக இது செருப்பால அடித்து பிடுங்கித் தின்னும் வகை. ஆண்கள் ஆசையை வெளிப்படுத்தும்போது உடலும் மனமும் எந்த நிலையில் இருந்தாலும் பெண்கள் அதனை ஏற்க வேண்டும் என நினைக்கும் ஆண்கள், பெண்கள் ஆசையை வெளிப்படுத்தும் போது தானும் அதனை பின்பற்றவேண்டும் என நினைப்பதில்லை. தங்களுக்கு வேறு வேலை இருப்பதாகக் கூறி அவமதிக்கும் ஆண்கள் அதே அவமான தனக்கு நேர்ந்தால் தங்கள் மனோநிலை என்னவாகும் என சிந்திப்பதில்லை.

சனி, ஞாயிறு விடுமுறை தினங்கள் வேலைக்குச் செல்லும் பெண்களின் மனதில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்துகிறது. விடுமுறை என்பது ஆண்களுக்கு மட்டுமல்லவே? பெண்களுக்கும் தானே? ஒருவாரத்து துணிகளைத் துவைத்தல், வீடு சுத்தம் உள்ளிட்ட பணிகளில் பெண்கள் ஈடுபடும்போது ஆண்கள் டி.வி. பார்த்தல் நண்பர்களுடன் சுற்றுதல் என ரிலாக்ஸ் செய்வது பெண்களுக்கு இரட்டிப்பு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. விடுமுறை நாட்களில் ஆண்கள் பெண்களுக்கு உதவியாக இருந்தால் என்ன குறைந்துவிடும். 

பர்சனாலிட்டி குறித்து ஊரில் யார் எது சொன்னாலும் கேட்கத் தோன்றும். மனைவி விவகாரத்தில் மட்டும் ஈகோ இடிக்கிறது. இந்த தலையலங்காரம் வேண்டாம், ஆடை அணியும் பாணியை மாற்றுங்கள் என்று கூறுவது தங்கள் மேல் உள்ள மனைவியின் அக்கறை என்பதை புரிந்துகொள்ளும் திறன் பலருக்கு இருப்பதில்லை மனைவியை விட வேறு எந்த பெண்ணும், கணவனை அழகுப்படுத்தி பார்த்துவிட முடியாது என்பதை புரிந்துகொண்டாலே வாழ்க்கை இனிக்கத் தொடங்கிவிடும்.