குழந்தைகளை தனியாக விட்டுவிட்டு வேலைக்கு செல்லும் பெற்றோர் கட்டாயம் செய்ய வேண்டிய 5 விஷயங்களை இங்கு காணலாம்.

இன்றைய காலகட்டத்தில் ஆண், பெண் இருவருமே வேலைக்கு சென்று பணம் ஈட்டினால் தான் குடும்பத்தை பராமரிக்க முடியும். செலவுகள் தலைக்கு மேல் சென்றுவிட்டது. பெரும்பாலான குடும்பங்களில் தாய், தந்தை இருவருமே வேலையில் ஈடுபட வேண்டியுள்ளது. சில பெற்றோர் குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டுசெல்கிறார்கள். ஆனால் சிறு பிழை கூட குழந்தையை பதட்டப்படுத்த வாய்ப்புள்ளது. அண்மையில் வீட்டில் தனியாக இருக்கும் குழந்தைகள் மீதான அச்சுறுத்தல்கள், பாலியல் துன்புறுத்தல்கள், விபத்துக்கள் பெருகி வருகிறது.

இந்த சம்பவங்கள் பெற்றோருக்கு மிகுந்த அழுத்தம் தருகின்றன. சில இடங்களில் அந்நியர்கள் வீட்டுக்குள் நுழைவது போன்ற கொடுமைகளும் நடக்கின்றன. வீட்டில் தாத்தா, பாட்டி என யாருமே இல்லாமல் தனியாக குழந்தையை விட்டு செல்லும் பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்களை இங்கு காணலாம்.

பாதுகாப்பு விதிகள்

குழந்தைகளுக்கு சில அடிப்படையான பாதுகாப்பு விதிகளை சொல்லிக் கொடுப்பது அவசியமாகிறது. வீட்டில் உள்ள கேஸ் அடுப்புகள், மின்சாதனங்களை குறித்து அவர்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். அந்நியர்கள் யாரும் வீட்டிற்கு வந்தால் கதவை திறக்கக்கூடாது. தனிப்பட்ட தகவல்களை அந்நியர்களிடம் சொல்லக் கூடாது என்பதை சொல்லி விடுங்கள். செல்போனையும், இன்டர்நெட்டையும் எப்படி சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதை கற்றுக் கொடுங்கள்.

முக்கிய தொலைபேசி எண்கள்

அவசர தேவைகளுக்கும் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களை வீட்டில் எழுதி வையுங்கள். பெற்றோரின் எண்கள், நெருங்கிய உறவினர்களுடைய எண்கள், அவசர சேவைகளான எண்கள் (100 (போலீஸ்), 108 (ஆம்புலன்ஸ்), 112 (எமெர்ஜன்ஸி)) போன்றவற்றை எழுதி, வீட்டு குளிர்சாதன பெட்டியின் மீது ஒட்டி வையுங்கள். ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழும் போது அந்த எண்ணுக்கு அழைக்க வேண்டும் என அறிவுறுத்துங்கள்.

ஆபத்தான பொருள்கள்

பெற்றோர் வேலைக்கு செல்வதற்கு முன்பாக, வீட்டில் குழந்தைகளை பாதிக்கக்கூடிய ஆபத்தான பொருட்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மிகவும் கூர்மையான பொருள்கள், ஆபத்தான மருந்துகள் போன்றவை குழந்தைகள் கைக்கு கிடைக்குமாறு வைக்கக்கூடாது.

ஆரோக்கியமான உணவு

குழந்தைகளுக்கு பசியுணர்வு ஏற்பட்டால் அதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. வீட்டில் உணவு இல்லையென்றால் அவர்களாகவே சமைக்க முயற்சி செய்யலாம். இது மிகவும் ஆபத்தான விஷயமாகும். அதனால் குழந்தையை வீட்டில் விட்டு செல்லும் பெற்றோர் அவர்களுக்கு தேவையான உணவையும், தின்பண்டங்களையும் தயார் செய்து வைத்து விட்டு செல்ல வேண்டும்.

தொடர்பில் இருங்கள்:

குழந்தைகளை விட்டுவிட்டு ஊருக்கு சென்றாலும் அல்லது வேலைக்கு சென்றாலும் சரி அவர்களுடன் அடிக்கடி பேச வேண்டும். வீடியோ அல்லது சாதாரண அழைப்புகள் மூலம் குழந்தைகளிடம் உரையாடுங்கள். அவர்கள் தனிமையை உணராதபடி தொடர்பில் இருங்கள். இதனால் குழந்தைகளின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அவர்களை தொந்தரவு செய்வது போல அல்லாமல் அன்பாக குறிப்பிட்ட இடைவெளிக்கு பின்னர் பேசுங்கள்.

குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டு செல்வது எந்த பெற்றோருக்கும் கடினமான செயலாகும். ஆனால் சூழ்நிலைகள் சில நேரங்களில் குழந்தைகளை வீட்டில் விட்டு செல்லும் நிலைக்கு தள்ளிவிடும். அந்த நேரங்களில் அவர்களுடன் அடிக்கடி பேசுவதும் அவர்களுக்கு தேவையான விஷயங்களை பூர்த்தி செய்வதும் அவர்களை தனிமையை உணரச் செய்யாது.