குழந்தைகள் க்ரஷ் பத்தி பேசினால், பெற்றோர் என்ன பதில் சொல்ல வேண்டும்? எப்படி வினையாற்ற வேண்டும் என இங்கு காணலாம்.
குழந்தைகளுக்கு எல்லா உணர்வுகளுமே புதிதாக தான் இருக்கும். அதிலும் இளசுகள் அனைத்தையும் முயன்று பார்க்க நினைக்கும் துடிப்பானவர்கள். பதின்பருவத்தில் ஆண் பிள்ளைகளும், பெண் குழந்தைகளும் ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பு கொள்ள தொடங்குவார்கள்.
எதிர்பாலின ஈர்ப்போ, தன்பாலின ஈர்ப்போ பதின்பருவத்தில் பீறிடும் அனைத்து உணர்வுகளையும் குழந்தைகளுக்கு கையாள தெரியாது. அந்த உணர்வுகளில் திளைக்கும்போது வெளி உலகமே தெரியாது. தங்களைச் சுற்றி பறக்கும் பட்டாம்பூச்சிகளை துரத்தி பிடிக்க நினைப்பார்கள். பள்ளி செல்லும் உங்கள் குழந்தை உங்களிடம் வந்து, ஒருவரை பிடித்திருப்பதாகச் சொன்னால் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு காணலாம்.
பொதுவாக குழந்தைகளுக்கு தங்களின் முதல் காதலுக்கான சிக்னல் 10 முதல் 13 வயதில் ஏற்படத் தொடங்கும். இது முற்றிலும் இயல்பானது. காதல் என்பது என்ன என்றும், பிரியங்களை பகிர்வது எப்படி என்றும் குழந்தைகள் தங்கள் வயதுக்கேற்ற அனுபவங்களை பெறுகிறார்கள். இந்த வாய்ப்புகள் குழந்தையின் வளர்ச்சியில் முக்கியமான படியாகும்.
ஸ்திரமான மற்றும் ஆழமான உறவை தொடங்கும் முன் குழந்தைகள் இதுபோல பல ஈர்ப்புகளை கடந்துதான் வருவார்கள். அதில் சில ஈர்ப்புகள் அவர்கள் பார்த்து வியக்கும் நபராக, வெறும் அடையாள ஈர்ப்பாக இருக்கும். சில நேரங்களில் காதல் வயப்படும் உணர்வாக இருக்கும். பெற்றோர் இதை குறித்து அறிவது அவசியம்.
முதலாவதாக குழந்தைகள் பெறும் அன்பும், அக்கறையும் குடும்பம்தான். இது சார்ந்த புரிதல் பெற்றோரிடம் கிடைக்கலாம். ஆனால் காதல் குறித்த ஐடியாக்களை நண்பர்களும், பொழுதுபோக்கு ஊடகங்களுமே ஏற்படுத்துகின்றனர். இது சில நேரங்களில் சரியாக இருக்காது. காதல் என்ற விஷயத்திற்கு கொடுக்கப்படும் வரையறைகள் நல்லவிதமாக இல்லாவிட்டால் அது மோசமான முடிவைத் தரும். ஆகவே உங்கள் குழந்தையுடன் காதல் உறவுகளைப் பற்றி கட்டாயம் நீங்கள் பதின்பருவத்தில் (11 வயதுக்கு பின்) பேச வேண்டும்.
உங்களிடம் காதல் விவகாரங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்ற உணர்வையும், நம்பிக்கையையும் ஏற்படுத்த வேண்டும். அவர்களுக்கு பரிச்சயமில்லாத உணர்ச்சிகளை எதிர்கொள்ளும்போது உங்களிடம் சொல்ல வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட வேண்டும். அதற்கு முன்கூட்டியே உங்கள் குழந்தைகளுக்கு ஒரு நண்பராக நீங்கள் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் உங்களை எல்லா தருணங்களிலும் உங்களிடமே தஞ்சமடைவார்கள்.
காதல் வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதையும், காதல் பற்றிய தத்துவவாதிகளின் சில ஆரோக்கியமான உரையாடல்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய வாழ்வில் நடந்த ருசிகரமான சம்பவங்களை சொல்லுங்கள். மேலும் டீன் ஏஜில் குழந்தைகளுக்கு ஹார்மோன் ஏற்றத் தாழ்வுகள், அடையாள சிக்கல்கள் போன்றவையும் ஏற்படும். குழப்பத்தில் இருப்பார்கள். இந்த சமயத்தில் பெற்றோர் அவர்களுக்கு ஆதரவாக இருக்கவேண்டும். பெற்றோரின் பூரண ஆதரவும், அன்பும் இருக்கும் குழந்தைகள் பெரும்பாலும் வெளியில் உறவுகளை தேடுவதில்லை.
குழந்தைகளின் உணர்வுகளை பகிர்ந்துகொள்ளும் சூழலை உருவாக்குங்கள். அவர்களை புரிந்துகொள்ளுங்கள். அவர்களுக்கு எழும் கேள்விகளை உதாசீனப்படுத்தாமல் பதிலளியுங்கள். குழந்தையின் க்ரஷ் தற்காலிகமாகக் கூட இருக்கலாம். ஆனால் நீங்கள் அதை வெளிப்படையாக சொல்லக் கூடாது. அதற்கு பதிலாக பள்ளிப் பருவத்தில் ஈர்ப்பு இயல்பானது என்பதை பக்குவமாக சொல்லலாம். அதுவும் வாழ்வின் ஒருபகுதி என்பதை கனிவாக சொல்லலாம். குறிப்பாக, 'நீ அதை கடந்துவிடுவாய், வெறும் ஈர்ப்புதான்' ஆகிய விஷயங்களைச் சொல்லிவிடவேண்டாம். பொறுமையாக கேளுங்கள்; அவர்களின் எல்லை எதுவரை என்பதை சுட்டிக் காட்டுங்கள். அது வெறும் க்ரஷ் என்றால் நாளடைவில் அதுவே மறைந்துவிடும்.
பள்ளிப் பருவத்தை படிப்பதில் செலவிட வேண்டும். அப்போது முழு நேரமாக க்ரஷ் காதல் என நேரத்தை வீணாக்கிவிட்டால் எதிர்காலத்தில் சந்திக்க வேண்டிய சிக்கல்களை சொல்லிக் கொடுங்கள். உணர்வுகள் வருவது இயல்புதான் ஆனால் முழுநேரம் அந்த சிந்தனை ஏற்றதல்ல. நமக்கு ஏற்ற நபரை உடனடியாகக் கண்டுபிடிப்பது சுலபம் அல்ல. எல்லா கதவுகளுக்கு பின்னும் பாசம் பரிமாறப்படுவதில்லை. இதை கொஞ்சம் கொஞ்சமாக பெற்றோர் புரிய வைக்க வேண்டும்.
நீங்கள் செய்ய வேண்டியது உங்களுடைய குழந்தைகளின் வாழ்க்கையில் துணையாக இருப்பதுதான். குழந்தையின் உணர்வுகளை மதிக்க வேண்டும். அதே நேரம் அவர்கள் நடவடிக்கைகளை மறைமுகமாக கண்காணிப்பதும் முக்கியம். அவர்களுக்கு அனைத்து நல்ல விஷயங்களையும், அவர்களின் எல்லைகளையும் கற்றுக் கொடுங்கள். நிச்சயம் தவறான பாதையை தேர்ந்தெடுக்கமாட்டார்கள்.
