குழந்தைகளை மன அழுத்தம் இல்லாமல் வளர்க்க பெற்றோருக்கு தெரிந்திருக்க வேண்டிய விஷயங்களை இங்கு காணலாம்.
வளர்ந்து வரும் தொழில்நுட்பம், அவசர வாழ்க்கை முறை, ஈ.எம்.ஐ, வேலை என பல விஷயங்கள் பெரியவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துவது நாம் அறிந்தது. ஆனால் பிஞ்சு குழந்தைகளுக்கும் மன அழுத்தம் வரும் தெரியுமா? பெரியவர்களைப் போலவே குழந்தைகளுக்கும் சில காரணங்களால் விரக்தி, மனச்சோர்வு போன்றவை ஏற்படுகிறது. படிப்பு, போட்டிகள், சமூக ஊடகங்கள், பெற்றோரின் எதிர்பார்ப்புகள் உள்ளிட்ட பல விஷயங்கள் குழந்தைகளுக்கு பாரமாக மாறிவிடுகிறது. இதனால் ஏற்படும் மன அழுத்தத்தை கையாள குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கப்படாவிட்டால், அவர்களுடைய உடல்நலம் மற்றும் தன்னம்பிக்கையில் மோசமான பாதிப்பை உண்டாக்கும். இதை பெற்றோர் எவ்வாறு தடுக்கலாம் என்பதை இங்கு காணலாம்.
குழந்தைகளுக்கு செவி கொடுங்கள்!
உங்களுடைய குழந்தை மன அழுத்தத்துடன் சிரமப்படுவதை நீங்கள் விரும்பவில்லை என்றால் அவர்களுடன் உரையாட எப்போதும் தயாராக இருங்கள். அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள். நீங்கள் அவர்கள் சொல்வதை கேட்க தயாராக இருக்கிறீர்கள் என்பதை அவர்கள் நம்புவது மிகவும் அவசியம். இதன் பின்னரே குழந்தைகள் வெளிப்படையாக உங்களிடம் தங்கள் மனதில் உள்ளவற்றை பகிர்வார்கள். அதை பகிர்ந்து கொள்ளும் போது பொறுமையாக கேட்டு அவர்களுக்கு உறுதுணையாக இருப்பதை உணர்த்துங்கள். இதனால் குழந்தைகள் தங்களுக்கு பெற்றோரின் ஆதரவு இருக்கிறது என்பதை புரிந்து கொள்வார்கள். தனிமையிலும், மன அழுத்தத்திலும் தங்களை வருத்திக் கொள்ளமாட்டார்கள்.
ஒப்பிடுதல்
பெற்றோரும், ஆசிரியரும் தங்களுக்கு தெரிந்தோ, தெரியாமமோ குழந்தைகளை பிற குழந்தைகளுடன் ஒப்பிடுகிறார்கள். இதனால் குழந்தைகள் தங்களுக்குள் அழுத்தத்தை உணர்கிறார்கள். நாளடைவில் தாங்கள் எதற்கும் உதவாதவர்கள் என்ற தாழ்வு மனப்பான்மை உருவாகிறது. அவர்களுடைய தன்னம்பிக்கையும் குறைந்து விரக்தி அடைகிறார்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் வெவ்வேறு திறமைகள் இருக்கும். அதை ஒப்பிடுவது தவறு.
மன அழுத்தத்தை பகிர்தல்
குழந்தைகள் தங்கள் மனதை பாதிக்கும் விஷயங்களை மறைப்பது சரியான அளவு முறை அல்ல. தங்களை வருத்தும் விஷயங்களையும், மனதிற்குள் அழுத்தத்தை ஏற்படும் விஷயங்களையும் பகிர வேண்டும் என்பதை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். தங்களுடைய எண்ணங்களை எழுதவும், வரையவும், பெற்றோருடம் பகிர்ந்து கொள்ளவும் சொல்லிக் கொடுங்கள். இது அவர்களுடைய மனதை இலகுவாக்கி மன அழுத்தத்தில் இருந்து விலக்கி வைக்கும்.
சமநிலை
குழந்தைகளை எப்போதும் படிக்க சொல்லி கட்டாயப்படுத்தக்கூடாது. அவர்களுடைய நாளை எப்போதும் சமநிலையில் வைத்திருக்க வேண்டும். படிப்புக்கு நேரம் கொடுப்பது போலவே விளையாடவும், பொழுதுபோக்குகளுக்கும், ஓய்வுக்கும் நேரம் கொடுக்க வேண்டும். இது அவர்களின் மன அழுத்தத்திலிருந்து வெளியே வர உதவுகின்றன.
நேர்மறை சிந்தனை குழந்தைகளுக்கு நேர்மறையாக சிந்திக்க கற்றுக் கொடுப்பது பெற்றோரின் கடமையாகும். எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதற்கு நிச்சயம் தீர்வு உண்டு என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். கடைசியில் எல்லாமே நன்றாக இருக்கும். அப்படியில்லை என்றால் அந்த விஷயம் முடியவில்லை. மீண்டும் முயற்சி செய்யலாம் என கற்றும் கொடுங்கள். சின்ன வெற்றிகளை கொண்டாடவும், எப்போதும் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையை விதைக்கவும் பெற்றோர் மறக்கக்கூடாது.
முன்மாதிரி
பெற்றோரை தான் குழந்தைகள் முன்மாதிரியாக எடுத்துக் கொள்வார்கள். தங்களுடைய பெற்றோரை ஹீரோவாக கருதாத எந்த குழந்தையும் இருக்க முடியாது. அதனால் குழந்தைகள் எப்படி வளர வேண்டும்? என நினைக்கிறீர்களோ அப்படி நீங்களும் வாழ்வது அவசியம். நீங்கள் மன அழுத்தத்தை, ஒரு பிரச்சனையை கையாள விதம், வீட்டில் நடந்து கொள்ளும் முறை போன்றவை குழந்தைகளுக்கு ஒரு பாடமாக அமையும். அதனால் நீங்கள் சரியாக இருங்கள். குழந்தைகளை அவர்களாகவே விஷயங்களை கற்றுக் கொள்ள அனுமதியுங்கள்.
பெற்றோர் மேலே சொன்ன விஷயங்களை கவனித்து அதன்படி, தங்களுடைய வாழ்க்கையை செயல்படுத்தும் போது குழந்தைகள் உற்சாகமாகவும், படைப்பாற்றல் மிகுந்தவர்களாகவும் வளர்வார்கள். மன அழுத்தத்தைக் கையாளவும் கற்றுக் கொள்வார்கள்.
