- Home
- Lifestyle
- Parenting Tips : நீங்க நல்ல பெற்றோரா? அப்ப உங்க குழந்தைங்க கிட்ட இருந்து இதை தெரிஞ்சுக்கோங்க!
Parenting Tips : நீங்க நல்ல பெற்றோரா? அப்ப உங்க குழந்தைங்க கிட்ட இருந்து இதை தெரிஞ்சுக்கோங்க!
பெற்றோர் தங்கள் குழந்தைகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய சில விஷயங்களை குறித்து இங்கு காணலாம்.

Parenting Tips
பெற்றோராக இருப்பது ஒரு ரோலர் கோஸ்டர் அனுபவம் போல! நீங்கள் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும். உங்கள் குழந்தையின் நல்ல பண்புகளுக்கும், கெட்ட பண்புகளுக்கும் நீங்களே பொறுப்பு. நல்ல பெற்றோர் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதை போலவே அவர்களிடமிருந்தும் கற்றும் கொள்வார்கள். இந்தப் பதிவில் குழந்தைகளிடமிருந்து கட்டாயம் பெற்றோர் கற்றுக் கொள்ள வேண்டிய சில விஷயங்களை காணலாம்.
ஆர்வமும், மகிழ்ச்சியும்!
குழந்தைகள் இடத்தில் தீராத ஆர்வமும், மகிழ்ச்சியும் அதிகம் இருக்கும். அதனால் புதிய விஷயங்களை கண்டதும் ஆச்சரியப்படுவார்கள். அதை அனுபவிக்கும் போது மகிழ்ச்சியில் திளைப்பார்கள். அதுவும் எல்லையில்லா மகிழ்ச்சி. அவர்களுக்கு பணத்தின் பதிப்பு, சின்ன பொருள், பெரிய பொருள், இது, அது என எதுவும் பாகுபாடு தெரியாது. கண்களில் எல்லையில்லா ஆர்வமும் மகிழ்ச்சியும் இருக்கும். புதிய உணவை அனுபவித்து உண்பதிலும், புதிய இடத்தில் குதித்து ஆட்டம் போடுவதிலும் அவர்கள் உலகமே தனிதான். அவர்களைப் போலவே ஆர்வத்துடன் வாழ்க்கையை ஒட்டு மொத்த அழகையும் அனுபவிக்க பெற்றோர் கற்றுக் கொள்ள வேண்டும்.
நம்பிக்கை
குழந்தைகளுக்கு வெல்ல முடியாதது என்று எதுவும் கிடையாது. உலகத்தில் உள்ள அனைத்து விஷயங்களையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உணர்வு அவர்களிடம் இருக்கும். ஆனால் பெற்றோராகிய நமக்கு பணம், செல்வம் மற்றும் புகழ் ஆகியவை உலகை காணும் விதத்தை மாற்றிவிடுகிறது. பெற்றோர் குழந்தைகளிடம் இருந்து அசாத்தியமான நம்பிக்கையை கற்றுக் கொள்ள வேண்டும். குழந்தையின் கண்கள் வழியாக அவ்வப்போது உலகை காணும் வித்தையை கற்றுக் கொண்டால் வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும்.
கெட்டதிலும் நல்லது!
நல்ல வழியில் வந்த துரதிஷ்டமும் நன்மைக்கே என ஒரு தத்துவஞானி சொன்னது இங்கே நினைவுக்கு வருகிறது. குழந்தைகள் எல்லாவற்றையும் நல்லதாகவே பார்க்கக்கூடிய திறன் கொண்டவர்கள். எல்லா இடங்களிலும், எல்லாம் நேரங்களிலும் அவர்களுக்கு சந்தோஷப்படவும், விளையாடவும் காரணங்கள் இருக்கும். குழந்தைகளைப் போல வாழ்க்கையில் உள்ள சின்ன விஷயங்களின் மகிழ்ச்சியை ரசிக்கத் தொடங்குங்கள்.
மறதி!
குழந்தைகளுக்கு பகையை மனதில் வைத்துக்கொள்ள தெரியாது. அனைத்தையும் எளிதில் மறந்து முன்னேறிவிடுவார்கள். வெறுப்புகளை துறந்து மன்னிக்க அவர்களால் முடியும். இதனால் உறவுகள் ஆரோக்கியமாக இருக்கும். பெற்றோர் இந்த குணத்தை குழந்தைகளிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். மன்னிக்க பழக வேண்டும்.
நேர்மை:
குழந்தைகள் நேர்மையானவர்கள். பெரியவர்கள் வெளிப்படுத்த முடியாத விஷயங்கள் கூட எளிதாக குழந்தைகள் வெளிப்படுத்துவார்கள். குழந்தைகளின் மன்னிக்கும் திறன், நேர்மை, வெளிப்படை தன்மை ஆகியவை பெரியோருக்கு மிகப்பெரிய பாடம் என்றே சொல்ல வேண்டும். குழந்தைகள் சமூக கட்டுப்பாடுகள், எதார்த்தங்களால் பாதிக்கப்படாத தூய்மையான எண்ணங்களை உடையவர்கள். அவர்களைப் போலவே பெற்றோர் சில விஷயங்களை அணுகினால் உறவுகளில் பகைமையும், விரிசலும் ஏற்படாது.
மேலே சொன்ன இந்த பண்புகளை குழந்தைகளிடமிருந்து பெற்றோர் கற்றுக் கொண்டால் வாழ்க்கையில் நிம்மதியும் மகிழ்ச்சியும் தங்கும்.