குழந்தைகள் அழுது அடம்பிடிக்காமல் வீட்டுப்பாடங்களை எளிமையாக எழுதவும், படிக்கவும் பெற்றோர் செய்யவேண்டிய குறிப்புகள்.
குழந்தைகள் வீட்டுப்பாடம் என்றாலே அலறுவார்கள். பள்ளியிலும் படிப்பு, வீட்டிலும் படிப்பு என்றால் சலிப்புத்தட்ட தான் செய்யும். ஆனால் படித்துதான் ஆக வேண்டும் இல்லையா? இது பெற்றோருக்கும் பெரிய தலைவலி. குழந்தைகளை வீட்டுப்பாடம் எழுத செய்வதே பெரிய டாஸ்க். இந்தப் பதிவில், சுதந்திரமாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்ற சில குறிப்புகளை காணலாம்.
உதவுதல்
எந்த பாடம் கடினமானதோ அதற்கு நீங்கள் உதவுவதாகவும் எளிமையானவற்றை அவர்களையே செய்யவும் வழிகாட்டுங்கள். பச்சாதாபம் கொண்டு குழந்தைகளை வழிநடத்துங்கள்.
தன்னாட்சி
பெற்றோர் தொடர்ந்து குழந்தைகளை வீட்டுப்பாடம் செய்யச் சொல்லி கண்காணித்தால் அவர்கள் பதட்டமடைவார்கள. இதனால் குழந்தைகளுக்கு அழுத்தம் ஏற்படும். குழந்தைகளை அதிகமாகக் கட்டுப்படுத்தும்போதும், அவர்களுக்கு ஆணையிடும்போதும் அது குழந்தையின் உள்ளார்ந்த ஆர்வத்தையும், தன்னாட்சியையும், திறனையும் பலவீனப்படுத்தலாம். இதனால் பதட்டம், விரக்தி அதிகரிக்கும். இதை சரிசெய்ய, "நீ கொஞ்சம் அதை படிச்சு பாக்குறீயா? அந்த கணக்கை போட்டு பாக்குறீயா?" என குழந்தைகளை முயற்சி செய்ய தூண்டுங்கள். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவ்வப்போது சின்ன சின்ன பரிசுகள் வழங்குகள்.
சுதந்திரத்தை ஊக்குவித்தல்
2017 ஆம் ஆண்டில் செய்த ஆய்வில், சீன மாணவர்களில் எதிர்மறை உணர்ச்சி கொண்ட மாணவர்கள் பெரும்பாலும் வீட்டுப்பாடத்தில் பெற்றோரின் அழுத்தம், ஈடுபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். ஓரளவுக்கு மேல் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படும் பெற்றோர், தங்கள் குழந்தைகளின் சிக்கல் தீர்க்கும் திறன்களைக் குறைக்கிறார்கள். பெற்றோர் தங்கள் குழந்தையுடன் ஆரோக்கியமான உரையாடலை வளர்ப்பதால் குழந்தையின் உணர்ச்சிகள் சமநிலையில் இருக்கும். குழந்தைகள் உதவிகோரும்போது மட்டுமே உதவுங்கள்.
ஆரோக்கியமான பழக்கங்கள்
வீட்டுப்பாடங்களை செய்ய தனி நேரம் ஒதுக்கி அதில் படிக்கவும், எழுதவும் குழந்தைகளை பழக்க வேண்டும். அதன் பிறகு விரும்பிய கார்டூன் பார்க்கவும், விளையாடவும் அனுமதிப்பதாக கூறுங்கள்.
மூளைக்கு வேலை
வீட்டில் படிக்க தனி அட்டவணைகள் உருவாக்குங்கள். இது குழந்தைகள் உற்பத்தித்திறனில் மேம்பாட்டை உண்டாக்கும். உதாரணமாக 7 மணிக்கு வீட்டுப்பாடம் எழுதுதல், 8 மணிக்கு கார்டூன், 8.30 மணிக்கு உணவு, 9 மணிக்கு தூக்கம் என வார நாட்களில் பழக்கப்படுத்துங்கள். ஜம்பிங் ஜாக்ஸ், தோப்புக்கரணம் போன்ற பயிற்சிகள் மூளையை சுறுசுறுப்பாக்க உதவும். அதை தினமும் செய்ய வைக்கலாம்.
