- Home
- Lifestyle
- Kids Memory : பெற்றோரே!! குழந்தைங்க படிக்குறத உடனே மறக்குறாங்களா? ஞாபக சக்தியை அதிகரிக்கும் டிப்ஸ்!!
Kids Memory : பெற்றோரே!! குழந்தைங்க படிக்குறத உடனே மறக்குறாங்களா? ஞாபக சக்தியை அதிகரிக்கும் டிப்ஸ்!!
குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகமாக்கும் சிறந்த வழிமுறைகளை இங்கு காணலாம்.

Memory Improvement Tips for Children
படிக்கும் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி மிகவும் அவசியமானது. ஒவ்வொரு குழந்தைக்கும் நினைவாற்றல் அவசியம். இதுவே அவர்கள் எதை கற்கிறார்கள்? எப்படி கற்றுக் கொள்கிறார்கள் என்பதை மூளையில் இருந்து நினைவுப்படுத்தக் கூடியது. ஒவ்வொரு குழந்தைகளுக்கும் திரும்பத் திரும்ப படிக்க சொல்லிக் கொடுக்கும் பெற்றோருக்கு அதை எப்படி நினைவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை சொல்லித் தர தெரிவதில்லை. இந்தப் பதிவில் குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகப்படுத்தும் விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
வாசனையை அறிதல்
குழந்தைகளின் ஞாபகசக்தி அதிகப்படுத்த அவர்களுக்கு புலன்களை பயன்படுத்துவதை கற்பிக்க வேண்டும். குழந்தைகள் வாசனையை அறிந்து கொள்ளும் போது அதை மூளையில் உள்ள நினைவகம் சிறப்பாக நினைவு கூறுவதாக அறிவியல் தெரிவிக்கிறது. உதாரணமாக, உங்களுடைய குழந்தை கணக்கு கற்றுக் கொள்ளும் போது வாசனை தொடர்பான விஷயங்களையும் சேர்த்து செய்ய வேண்டும். வாய்ப்பாடு படிக்கும் போது குழந்தைக்கு ஒரு கிராம்பு அல்லது எலுமிச்சை வாசனை கொண்ட கிரையானை முகர்ந்து கொண்டே படிக்கச் செய்யுங்கள். இது அவர்களுடைய நினைவாற்றலை வலுவாக்கும். திரும்பத் திரும்ப படிக்கும் போது இந்த வாசனையுடன் வாய்ப்பாடும் நங்கூரம் போல மனதில் பதிந்து விடும்.
தவறான பதில்கள்
குழந்தைகள் சரியான பதிலை கற்றுக் கொள்ளும் முன் தவறான பதில்களை தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு ஒரு கேள்வியை படிக்கும் முன் குழந்தைகளிடம் அதற்கான பதில்களை யூகிக்க வைக்க வேண்டும். இது அவர்களுடைய மூளையில் வலுவான நினைவாற்றல் பாதைகளை ஏற்படுத்துகிறது. தவறான பதில்களை சொல்லிவிட்டு சரியான பதில்களை படிக்கும் போது அந்த பதில்கள் அழுத்தம் திருத்தமாக அவர்களுடைய மூளையில் பதிந்து விடுகிறது.
பொம்மையுடன் பேசுதல்
குழந்தை தான் படித்ததை பெற்றோர் அல்லது ஆசிரியரிடம் சொல்லிக் காட்ட தயங்கலாம். இந்தப் பிரச்சனையை சரி செய்ய முதலில் அவர்களுடைய பொம்மையிடம் படித்ததை சொல்லுமாறு அறிவுறுத்தலாம். இது அவர்களுடைய மூளையில் நன்கு சேமிக்கப்பட்ட பின்னர் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் தன்னம்பிக்கை ஏற்படும்.
பாடலும் எழுத்துக்களும்?
குழந்தைகளையே அவர்களுடைய ரைம்ஸ்களை உருவாக்க சொல்லலாம். அவர்களையே ஒரு பாடலை உருவாக்க சொல்லலாம். இது அவர்களின் நினைவாற்றலை அதிகப்படுத்தும். உதாரணமாக அவர்கள் கிரகங்களைப் பற்றி படித்தால் அதை வைத்து "ட்விங்கிள் ட்விங்கிள்" போல ஒரு ரைம்ஸை அவர்களையே உருவாக்க சொல்லலாம். பாடலும் தாளமும் மூளையின் இரு பக்கங்களையும் செயல்படுத்துவதால் நீண்ட நாள் நினைவில் இருக்கும்.
பெட்ரூம் கிசுகிசுப்பு
மனிதனின் மூளை தூக்கத்தின் போது நினைவுகளை பலப்படுத்தும். அதனால் படுக்கைக்கு சென்ற பின்னர் படித்ததை மெதுவாக சொல்லிப் பார்க்கலாம். படிப்பதும், படித்ததை நினைத்துப் பார்ப்பதும் நினைவாற்றலை வலுப்படுத்த உதவும். தூங்கும் முன் இதை முயன்று பார்க்கலாம்.
இல்லாததை வரைதல்!
குழந்தைகள் பார்த்ததை வரைவதற்கு பதிலாக அவர்கள் பார்க்காததை வரைவதை ஊக்குவிக்க வேண்டும். உதாரணமாக ஒரு புத்தகத்தில் அவர்கள் எதை பார்த்தார்களோ அதற்கு பதிலாக எதை பார்க்கவில்லையோ அதை வரைய சொல்லலாம். வானவில் வானத்தில் இல்லாமல் ஒரு அறையில் இருந்தால் எப்படி இருக்கும்? மரம் தரையில் நேராக நிற்காமல், தலைகீழாக இருந்தால் எப்படி இருக்கும்? போன்ற அவர்கள் பார்க்காத விஷயங்களை வரைய சொல்லும்போது மூளையின் செயல்பாடு அபாரமாக இருக்கும். குழந்தைகள் கற்பனை திறன் கொண்டவர்களாக இருக்கும்போது அவர்களுடைய மூளையின் படைப்பாற்றல் திறனும் அதிகரிக்கிறது. இது அவர்களுடைய நினைவாற்றலை மேம்படுத்துகிறது.