கேழ்வரகு மாவு கெட்டுப் போகாமல் வருட கணக்கில் பயன்படுத்த சூப்பரான டிப்ஸ் இதோ!!
Tips For Store Ragi Flour : கேழ்வரகு மாவை கெட்டுப் போகாமல் நீண்ட நாள் பயன்படுத்துவது எப்படி என்று உங்களுக்காக சில குறிப்புகள் இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது.
கேழ்வரகு சிறு தானிய வகைகளில் ஒன்றாகும். இது ராகி என்றும் அழைக்கப்படுகிறது. கேழ்வரகில் எக்கச்சக்கமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அவை நம் உடல் ஆரோக்கியத்திற்கு பல விதமான நன்மைகளையும் வாரி வழங்குகின்றது. குறிப்பாக, சர்க்கரை நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க கேழ்வரகு முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால்தான் அரிசி மற்றும் கோதுமைக்கு பதிலாக கேழ்வரகு உணவுகளை சாப்பிடுவது நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
இத்தனை நன்மைகள் நிறைந்து இருக்கும் கேழ்வரகை நாம் நம்முடைய வீடுகளில் மாவாக அரைத்து அவ்வப்போது பயன்படுத்துவது வழக்கம். ஆனால், அவை கொஞ்ச நாள் ஆனதும் கெட்டியாக மாறி, பயன்படுத்த முடியாத அளவிற்கு போய்விடும். எனவே, கேழ்வரகு மாவை கெட்டுப் போகாமல் நீண்ட நாள் பயன்படுத்துவது எப்படி என்று உங்களுக்காக சில குறிப்புகள் இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை நீங்கள் பின்பற்றி, கேழ்வரகு மாவை கெடாமல் பார்த்துக் கொள்ளலாம்.
இதையும் படிங்க: எலுமிச்சை சூப்பரா சுத்தம் செய்யும் தான்.. ஆனா இந்த 5 பொருட்களில் மட்டும் யூஸ் பண்ணாதீங்க..!
கேழ்வரகு மாவு கெட்டுப்போகாமல் இருக்க சில டிப்ஸ்கள்:
1. நன்கு சுத்தப்படுத்தி காய வையுங்கள்:
கேழ்வரகு மாவாக அரைப்பதற்கு முன் முதலில், அதை நன்கு தண்ணீரில் கழுவி பிறகு வெயிலில் காய வையுங்கள். அவற்றில் ஈரம் போன பிறகு அரைக்க கொடுங்கள். லேசான ஈரம் இருந்தால் கூட அவற்றை அரைத்தால், விரைவில் அது கெட்டுப்போய் பூஞ்சைகள் வந்துவிடும்.
2. காற்றுபடக்கூடாது:
கேழ்வரகு மாவை நீங்கள் காற்று புகாத ஒரு டப்பாவில் அடைத்து வையுங்கள். மேலும் நீங்கள் அதை அவ்வப்போது திறக்கும் போது, அதில் காற்று போகாதபடி, டப்பாவின் மூடியை இறுக்கமாக மூடி விடுங்கள். இல்லையெனில், ஆக்ஸிஜனேற்றம் அதில் உருவாகி கேழ்வரகு மாவு விரைவில் கெட்டுப் போய்விடும்.
இதையும் படிங்க: குக்கரில் விசில் அடிக்கும் போது தண்ணீர் லீக் ஆகுதா? அப்ப 'இத' மட்டும் தெரிஞ்சு வச்சுக்கோங்க இனி எப்பவும் வராது
3. குளிர்ச்சியான இடத்தில் வைக்கவும்:
கேழ்வரகு மாவை சீரான வெப்பநிலை இருக்கும் இடத்தில் சேமிக்கலாம். அதுபோல, குளிர்ச்சியான மற்றும் ஈரம் இல்லாத இடத்திலும் வைத்தும் பயன்படுத்தலாம். முக்கியமாக அடிக்கடி வெப்பநிலை மாறும் இடத்தில் கேழ்வரகு மாவை வைத்து பயன்படுத்தினால் பாத்திரத்திற்குள் ஈரப்பதம் உருவாகிவிடும். இதனால் அதன் சுவையும் மாறி, கட்டிகள் உருவாகி கெட்டுப் போய்விடும்.
4. சூரிய ஒளி இல்லாத இடத்தில் வைக்கவும்:
கேழ்வரகு மாவு வைத்திருக்கும் டப்பாவில் சூரிய ஒளி நேரடியாக படக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை சூரிய ஒளி அதன் மீது பட்டால் கேழ்வரகு அதன் ஊட்டச்சத்தை இழந்து விடும் மற்றும் அதன் தரமும் குறைந்து விடும்.
5. நல்ல டப்பாவை பயன்படுத்துங்கள்:
கேழ்வரகு மாவை நல்ல தரமான டப்பாவில் வைத்து பயன்படுத்துங்கள். முக்கியமாக, டப்பாவின் மூடி காற்று புகாதபடி இறுக்கமாக இருக்க வேண்டும். இல்லையெனில், கேழ்வரகு மாவானது விரைவில் கெட்டுப் போய்விடும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D