சாதா புலாவ், பிரியாணி சாப்பிட்டு அலுத்து போச்சா? அப்போ ஃபிரெஷ்ஷா மசாலா அரைச்சு செய்ற இந்த 'கர்நாடகா ஸ்டைல் காய்கறி புலாவ்' செஞ்சு பாருங்க. இதன் வாசனைக்கும் சுவைக்கும் பிரியாணியே தோத்துடும்!
சூப்பர் ரெசிபி இதோ.! செம்மையா சமைக்கிறோம்.! பயங்கரமா ருசிக்கிறோம்
எப்பவும் ஒரே மாதிரி பிரியாணி, தக்காளி சாதம் என்று செய்து சாப்பிடாமல், கொஞ்சம் வித்தியாசமாகவும் சுவையாகவும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்படியானால், கர்நாடகா ஸ்டைல் காய்கறி புலாவ் உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும். கர்நாடகாவில் மிகவும் பிரபலமான இந்த வெஜ் புலாவ், அதன் மணம் மற்றும் தனித்துவமான சுவைக்காக பலராலும் விரும்பி சாப்பிடப்படுகிறது.
இந்த புலாவின் முக்கிய சிறப்பே, ஃபிரெஷ்ஷாக அரைத்து சேர்க்கப்படும் பச்சை மசாலாதான். கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு போன்ற பொருட்களுடன் தயாரிக்கப்படும் இந்த மசாலா, புலாவுக்கு அட்டகாசமான வாசனையையும் சுவையையும் கொடுக்கும். இதனுடன் கேரட், பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளை சேர்ப்பதால் சுவையுடன் ஊட்டச்சத்தும் கிடைக்கும்.
சாதம் தனித்தனியாகவும், காய்கறிகள் நன்றாக வெந்தும் இருக்கும் வகையில் புலாவை பதமாக சமைப்பது முக்கியம். சூடான புலாவை வெங்காய ரைதா அல்லது தயிர் பச்சடியுடன் பரிமாறினால், அதன் சுவை இன்னும் அருமையாக இருக்கும். ஒருமுறை செய்து பாருங்கள்; வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!
காய்கறி புலாவ் செய்யத் தேவையான பொருட்கள்
மசாலா பேஸ்ட் அரைக்க:
கொத்தமல்லி தழை - 1 சிறிய கட்டு
புதினா தழை - 1 சிறிய கட்டு
துருவிய தேங்காய் - 1/4 கப்
பூண்டு பற்கள் - 6
இஞ்சி - அரை இன்ச் துண்டு
வெங்காயம் - 1/4 கப் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3
தண்ணீர் - 1/2 கப்
புலாவ் செய்ய:
அரிசி (சோனா மசூரி அல்லது சீரக சம்பா) - 1 கப்
கடலை எண்ணெய் - 3 டீஸ்பூன்
பிரியாணி இலை - 2
ஏலக்காய் - 1
கிராம்பு - 1
பட்டை - 1 இன்ச் துண்டு
அன்னாசிப்பூ - 1
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்
நறுக்கிய தக்காளி - 1
கறிவேப்பிலை - 2 கொத்து
வேர்க்கடலை - 2 டீஸ்பூன்
காய்கறி துண்டுகள் (கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பட்டாணி) - 2 கப்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 2 கப்
காய்கறி புலாவ் செய்யும் முறை
*முதலில், 1 கப் அரிசியை நல்லா கழுவி, குறைஞ்சது 30 நிமிஷம் ஊற வைங்க.
*ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி, புதினா, துருவிய தேங்காய், இஞ்சி, பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துக்கோங்க. அதோட அரை கப் தண்ணீர் விட்டு நல்லா நைசா பேஸ்ட் மாதிரி அரைச்சு எடுத்து வச்சுக்கோங்க.
*அடுப்புல பிரஷர் குக்கரை வச்சு, எண்ணெய் ஊத்தி சூடு பண்ணுங்க. எண்ணெய் காய்ஞ்சதும், பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, பட்டை, அன்னாசிப்பூ போட்டு நல்லா மணம் வர்ற வரைக்கும் வதக்குங்க.
*இப்போ நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமா வர்ற வரைக்கும் 2-3 நிமிஷம் வதக்குங்க. அப்புறம் தக்காளி, கறிவேப்பிலை, வேர்க்கடலை சேர்த்து தக்காளி மசியுற வரைக்கும் வதக்கணும்.
*அடுத்து, நாம அரைச்சு வச்ச பச்சை மசாலா பேஸ்ட்டை குக்கர்ல சேர்த்து, அதோட பச்சை வாசனை போற வரைக்கும் சுமார் 2 நிமிஷம் எண்ணெயில நல்லா வதக்குங்க.
*மசாலா வதங்குனதும், நறுக்கி வச்ச காய்கறிகளை சேர்த்து நல்லா கலந்து விடுங்க. அப்புறம் தேவையான அளவு உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து நல்லா கலந்து கொதிக்க விடுங்க.
*தண்ணீர் கொதிக்க ஆரம்பிச்சதும், ஊற வச்ச அரிசியில இருக்குற தண்ணீரை வடிச்சிட்டு, அரிசியை மட்டும் குக்கர்ல சேருங்க. அரிசியும் தண்ணீரும் சேர்ந்து கொதிக்கும்போது, குக்கர் மூடியை மூடி, மிதமான தீயில சரியா 2 விசில் வந்ததும் அடுப்பை ஆஃப் பண்ணிடுங்க.
*பிரஷர் அடங்குனதும் மூடியைத் திறந்து, லேசா கிளறினா, கமகமன்னு வாசனையோட, சுவையான, சூடான கர்நாடகா ஸ்டைல் காய்கறி புலாவ் சாப்பிட ரெடி!
இதை கெட்டியான தயிர் பச்சடியோட சாப்பிட்டா, ஆஹா... டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்!

