மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் செய்ய ஆரோக்கியமான எண்ணெய்கள் குறித்து நிபுணர் ஆலோசனையை இந்தப் பதிவில் காணலாம்.
வீட்டில் பஜ்ஜி, பக்கோடா, வடை முறுக்கு என எந்த பண்டங்கள் செய்தாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள். பூரி போன்ற பொரித்த உணவுகளும் அனைவருக்கும் பிடிக்கும். இது மாதிரி உணவுகளை செய்யும்போது எந்த எண்ணெய் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து மக்களுக்கு தெரிவதில்லை. சில எண்ணெய்களில் பலகாரங்கள் செய்வதால் உடலுக்கு கெட்ட விளைவுகள் ஏற்படக்கூடும்.
நீங்கள் அதிரசம், அச்சு முறுக்கு போன்ற இனிப்பு பலகாரங்கள் முதல் வடை, பஜ்ஜி, காரச்சேவு போன்ற போன்ற காரங்கள் வரை எது செய்தாலும் குறிப்பிட்ட சில எண்ணெய்களில் தான் செய்ய வேண்டும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்தப் பதிவில் உடலுக்கு தீங்கு விளைவிக்காத, பலகாரங்கள் செய்ய ஏற்ற ஆரோக்கியமான எண்ணெய்கள் குறித்து காணலாம்.
அதிக ஸ்மோக் பாயிண்ட் உள்ள எண்ணெய்களை தான் பலகாரங்கள் செய்ய தேர்ந்தெடுக்க வேண்டும் என இரைப்பை, குடல் நிபுணர் தெரிவிக்கிறார். பலகாரங்கள் செய்யும் போது எண்ணெய் நல்ல சூட்டில் இருக்க வேண்டும் அப்போதுதான் பலகாரங்கள் மொறுமொறுப்புடன் சுவை மிகுந்ததாக இருக்கும். ஆகவே அதிக சூட்டில் ஆக்சிஜனேற்றம் அடையும் விதை எண்ணெய் வகைகளை பயன்படுத்தக் கூடாது என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஸ்மோக் பாயிண்ட் என்றால் என்ன?
எண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் என்பது எண்ணெய் சிதைந்து புகையை வெளியிடும் வெப்பநிலையாகும். சில எண்ணெய்கள் அதிக சூட்டில் வறுக்கும் போது ஸ்மோக் பாயிண்ட் குறைவாக இருக்கும் காரணத்தால் சிதைந்து ஆரோக்கியமற்ற சேர்மங்களை வெளியிடும். ஆனால் ஸ்மோக் பாயிண்ட் இருந்தால் எண்ணெய் உடைந்து ஆரோக்கியமற்ற சேர்மங்களாக மாறாமல் இருக்கும். இந்த பதிவில் எந்த எண்ணெய்களை பயன்படுத்தி பொரிக்க வேண்டும் என காணலாம்.
தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெய்யில் நிறைவுற்ற கொழுப்புகள் காணப்படுகின்றன இவை 400 டிகிரி பாரன்ஹீட் ஸ்மோக் பாயிண்ட் கொண்டவை. இது தோராயமான மதிப்பு தான். ஆனால் ஆழமாக வறுக்கக் கூடிய உணவுகளுக்கு இந்த எண்ணை சிறந்தது.
நெய்
நெய் பலகாரங்கள் செய்ய ஏற்றது. இதில் நல்ல கொழுப்புகள், வைட்டமின்கள் உள்ளன. இது சுமார் 450 டிகிரி பாரன்ஹீட் ஸ்மோக் பாயின்ட் கொண்டது. அதிக வெப்பப்படுத்தினாலும் பாதிப்பை உண்டாக்காது.
அவகேடோ எண்ணெய்:
இது சிறந்த தேர்வு. ஆனால் விலை சற்று அதிகம். அதிகமான ஸ்மோக் பாயின்ட் கொண்டது. கிட்டத்தட்ட 520 டிகிரி பாரன்ஹீட் ஆகும். அதனால் ஸ்நாக்ஸ் செய்ய தாராளமாக பயன்படுத்தலாம்.
பயன்படுத்தக் கூடாதவை;
ஸ்நாக்ஸ் செய்ய விதைகளில் இருந்து பெறப்படும் எண்ணெய்கள் பயன்படுத்தக் கூடாது. சூரியகாந்தி, சோயாபீன், கனோலா ஆகிய விதை எண்ணெய்களை முற்றிலும் தவிருங்கள். இதில் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் இருக்கின்றன. அதிகமாக சூடாக்கும்போது ஆக்ஸிஜனேற்றம் அடையும்.
கடுகு எண்ணெய்:
கடுகு எண்ணெய் கொஞ்சமாக பயன்படுத்தக் கூடியது. அதிகளவில் பயன்படுத்துவது இதய நோயை ஏற்படுத்தலாம். பொதுவாக விதைகளில் பெறப்படும் எண்ணெய்கள் விரைவில் ஆக்ஸிஜனேற்றம் அடையும். இதை சாப்பிடும்போது, உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களை ஏற்படுத்தலாம். இது செல்களில் வீக்கம், பாதிப்பை உண்டாக்கலாம். இதய நோய், உடல் பருமன், புற்றுநோய் பாதிப்புகளுடன் தொடர்புடையது.
