வெறிச்சோடிய ரோட்டில் செல்பி எடுத்தாலும் மாட்டப்போறீங்க...! ஒழுங்கா வீட்டில் இருங்க பசங்களா..!

பொது இடங்களில் செல்பி எடுப்பதையும்,தேவை இல்லாமல் பொது இடங்களுக்கு வெளியில் செல்வதையும் தவிர்க்க வேண்டும் என கரூர்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தெரிவித்து உள்ளார்.

21 நாள் ஊரடங்கு உத்தரவு என்பதால், சாலைகள் வெறிச்சோடி காணப்படுவதை பார்க்க முடிகிறது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் ஒரு சில இளைஞர்கள் ஒன்றாக கூடி கிரிக்கெட் விளையாடுவதும், நடுரோட்டில் நின்று செல்பி எடுத்துக்கொள்வதுமாக உள்ளனர்.

இந்த நிலையில், கரூர் நகரில் பேருந்து நிலையம் அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் அப்பகுதியில் இருந்த மருந்தகத்தில் மருந்து வாங்க வரும் வாடிக்கையாளர்களை 1 மீ இடைவெளியில் தள்ளி நின்று மருந்துகளை வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். பின்னர், சாலையில் வாகங்களை செல்லும் நபர்களை நிறுத்தி தேவையில்லாமல் வெளியில் வரக் கூடாது என்றும், அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டுமே வரவேண்டும் என அறிவுறுத்தினார். 

நேற்றை விட இன்று ஓரளவிற்கு பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் மாலை நேரங்களில் யாரும் வெளியில் அதிகளவில் நடமாடவில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் நிம்மதியடைந்தனர். 

அப்போது பேசிய காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், கரூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக 144 மீறி பொது இடங்களில் சுற்றித் திரிபவர்கள் மீது 33 வழக்குகள் பதியப்பட்டு 35 பேர் கைது செய்து 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த இக்கட்டான கால கட்டத்தில் பொது இடங்களில் செல்பி எடுப்பதோ, தேவை இல்லாமல் பொது இடங்களுக்கு வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும், சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு அத்தியாவசிய பொருள்களை எடுத்து வர வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்து உள்ளார்