பல் துலக்கிய பிறகும் வாயில் துர்நாற்றம் அடிப்பதற்கான காரணங்களும், தீர்வுகளும் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வாய் சுத்தமாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்க தான் நாம் தினமும் காலை எழுத்ததும் பல் துலக்குகிறோம். ஆனால், என்ன தான் பிரஷ் பண்ணிணாலும் வாயில் துர்நாற்றம் வீசுவதாக ஒரு சிலர் புலம்புகிறார்கள். இதே பிரச்சினையை நீங்களும் அனுபவிக்கிறீர்கள் என்றால் அதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் என்ன என்பது குறித்து இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பல் துலக்கினாலும் வாய் துர்நாற்றம் அடிக்க காரணங்கள் என்ன?
பல் துலக்கிய பிறகும் வாய்ப்பு துர்நாற்றம் அடிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை
- நாக்கில் பாக்டீரியாக்கள் இருப்பது
- ஈறு நோய் - வாய் வறண்டு இருத்தல்
- உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறைகள்
- பற்களுக்கு பயன்படுத்தும் சாதனங்கள்
- புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல்
- மருந்துகளின் விளைவுகள்
- அடிப்படை உடல்நல பிரச்சனைகள் ( சர்க்கரை நோய், சிறுநீரக மற்றும் கல்லீரல் பிரச்சனைகள் போன்றவை)
தீர்வுகள் என்ன?
1. நாக்கில் இருக்கும் பாக்டீரியாக்கள்
நாக்கில் பாக்டீரியாக்கள் இருப்பதற்கு முக்கிய காரணம் உணவுகளின் துகள்கள், இறந்த செல்கள், உமிழ்நீரானது நாக்கில் பிளேக் அடுக்குகளை உருவாக்குதல் போன்றவையாகும். எனவே, நாக்கை பல் துலக்கும் போதெல்லாம் சுத்தம் செய்து வந்தால் வாய் துர்நாற்றம் அடிக்காது. வாய் வழி சுகாதாரமும் மேம்படும்.
2. ஈறு நோய்கள்
ஈறு அலர்ஜி போன்ற நோய்கள் காரணமாக வாயில் வீக்கம் ஏற்படும். இதனால் வாயில் பாக்டீரியாக்களும் அப்படியே இருக்கும். இந்த பாக்டீரியாக்கள் தான் வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். இதை தவிர்க்க சரியான முறையில் பல் துலக்குதல் மற்றும் வழக்கமான பல் பரிசோதனை செய்ய வேண்டும்.
3. வாய் வறண்டு இருப்பது
பொதுவாக நம் வாயில் இருக்கும் உமிழ்நீரானது வாயை சுத்தமாக்கி பாக்டீரியா வளர்ச்சியை கட்டுப்படுத்திவிடும். ஆனால் சர்க்கரை நோய், சிறுநீரகப் பிரச்சனை போன்ற நோய்களுக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகள் விளைவால் வாயில் உமிழ்நீர் உற்பத்தியானது குறைந்துவிடும். இதனால் வாய் துர்நாற்றம் அதிகரிக்கும். இதை தவிர்க்க போதுமான அளவு தண்ணீர் குடித்தல், சர்க்கரை இல்லாத உணவுகளை சாப்பிடுதல், உமிழ்நீரை தூண்டும் வழிமுறைகளைப் பின்பற்றுதல் ஆகியவை பெரிதும் உதவியாக இருக்கும்.
4. உணவு மற்றும் வாழ்க்கை முறை
வெங்காயம், பூண்டு, காரமான உணவுகள், அதிகப்படியான காபி குடித்தல், புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்றவை வாய் துர்நாற்றத்திற்கு காரணமாக அமைகிறது. பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதன் மூலம் வாய் துர்நாற்றத்தை குறைக்கலாம். இது தவிர கிரீன் டீயும் குடிப்பது நல்லது. இதனால் வாயும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
5. உடல்நல பிரச்சினைகள்
இரைப்பை அலர்ஜி, அமில ரிஃப்ளக்ஸ், சர்க்கரை நோய், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பிரச்சனைகள் போன்றவையும் வாய் துர்நாற்றத்தை அதிகரிக்கச் செய்யும். எனவே, இந்த பிரச்சினைகள் இருந்தால் உடனே மருத்துவரிடம் சென்று அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள். இது தவிர நீங்கள் வாய் ஆரோக்கியத்தை நன்றாக பராமரித்தாலும், அதிகப்படியான துர்நாற்றம் வீசினாலோ அல்லது துர்நாற்றம் நீடித்தாலோ உடனே மருத்துவரை அணுகுவது தான் நல்லது.
6. பற்களுக்கான சாதனங்கள்
சில சமயத்தில் பற்களுக்கு பயன்படுத்தப்படும் சாதனங்கள் உணவு துகள்கள், பாக்டீரியாக்களை தக்க வைத்துக் கொள்ளும். எனவே தினமும் இதை பயன்படுத்தினாலும் இரவில் தவிர்ப்பது நல்லது. இதனால் பாக்டீரியாக்களின் வளர்ச்சி தடுக்கப்படும். இது தவிர வழக்கமான பல் பரிசோதனையும் செய்து கொள்ளுங்கள்.
வாய் துர்நாற்றத்தை குறைக்க :
- வாய் துர்நாற்றத்தை குறைக்க காலை, இரவு என ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும்.
- தினமும் போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள்.
- ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு பழக்கத்தை பின்பற்றுங்கள்.
- புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதலை தவிர்ப்பது நல்லது.
- தினசரி உடற்பயிற்சி மற்றும் சிறிது நேரம் ஓய்வு எடுத்தல் ஆகியவற்றை பின்பற்றுவதன் மூலம் வாய் துர்நாற்றத்தை குறைக்கலாம்.
எப்போது மருத்துவரை பார்க்கனும்?
சரியான முறையில் வாய்வழி சுகாதாரத்தை பின்பற்றினாலும் துர்நாற்றம் நீடித்தாலோ, ஈறு நோய், செரிமான கோளாறு அல்லது பிற உடல்நிலை பிரச்சினைகள் ஏற்பட்டாலோ, ஈறுகளில் இரத்தப்போக்கு, சுவையில் மாற்றம் போன்ற அறிகுறிகள் தென்பட்டாலோ உடனே மருத்துவரை அணுகி அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள்.
