பட்டினி பசியுடன் மண்ணை உண்டு உயிரிழந்த 2 வயது சிறுமி..!

ஆந்திர மாநிலத்தில் உணவில்லாமல் பட்டினியால் மண்ணை எடுத்து உண்ட குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள அனந்தப்பூர் மாவட்ட சாலையோர பகுதியில் வசித்து வருபவர்கள் மகேஷ் மற்றும் நீலவேணி தம்பதியினர். இவர்கள் சாலை ஓரத்தில் குடிசை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். இந்த 5 குழந்தைகளுடன் நீலவேணியின் அக்கா மகளும் இருந்துள்ளார். இந்நிலையில் வெறும் இரண்டே வயதான நீலவேணியின் குழந்தை வனிதா பசியின் கொடுமை தாங்காமல் அருகிலிருந்த மண்ணை எடுத்து விழுங்கி உள்ளார். 

அதன் பின்பு சுமார் ஒரு மணி நேரம் நார்மலாக இருந்த வனிதாவிற்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து அழுத வண்ணம் இருந்துள்ளது குழந்தை. பின்னர் வயிறு வீங்கி உள்ளது. அதற்குப் பின் சற்று நேரத்தில் குழந்தை வனிதா துடிதுடித்து இறந்துள்ளார்.

இதனை மறைக்கும் பொருட்டு மகேஷ் மற்றும் நீலவேணி தம்பதியினர் குழந்தையினை வீட்டின் அருகிலேயே பள்ளம் தோண்டி புதைத்து உள்ளனர். இந்த சம்பவம் போலீசாருக்கு தெரிய வரவே தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனையின் முடிவில் குழந்தை பசியின் காரணமாக மண்ணை உண்டதும், அதனால் வயிறு கோளாறு ஏற்பட்டு குழந்தை துடிதுடித்து இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.