அனைத்து வகையான வகுப்புவாதமும் வன்முறையும் சகித்துக் கொள்ள முடியாதது: ராகுல் காந்தி!!
அனைத்து வகையான வகுப்புவாதமும் வன்முறையும், அவை எங்கு இருந்து வந்தாலும், ஒரே மாதிரியானவை தான். அவற்றை எதிர்க்க வேண்டும் . இதை ஏற்றுக் கொள்ள முடியாது, சகித்துக் கொள்ள முடியாதது என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இன்று தெரிவித்தார்.
தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) மற்றும் அமலாக்கத்துறை இணைந்து கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்களில் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி செய்ததாக பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்பைச் சேர்ந்தவர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தின. கேரளாவில் மட்டும் 50 இடங்களில் ரெய்டு நடந்தது.
இந்த ரெய்டில் 13 மாநிலங்களில் பிஎப்ஐ உடன் தொடர்புடைய 106 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கியமாக தென்னிந்தியாவில் உள்ள பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவைச் சேர்ந்தவர்களின் வீடுகளில் சோதனைகள் நடத்தப்பட்டன. பிஎப்ஐ-க்கு எதிராக தேசிய புலனாய்வு அமைப்பின் மிகப்பெரிய நடவடிக்கை இதுவாக கருதப்படுகிறது. சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்டிபிஐ) தலைவர்களின் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி தவிர பயிற்சியையும் ஏற்பாடு செய்ததாக பிஎப்ஐ மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஆந்திராவில் 5 பேர், அசாமில் 9 பேர், டெல்லியில் 3 பேர், கர்நாடகாவில் 20 பேர், கேரளாவில் 22 பேர், மத்தியப் பிரதேசத்தில் 4 பேர், மகாராஷ்டிராவில் 20 பேர், தமிழ்நாட்டில் 10 பேர், ராஜஸ்தானில் 2 பேர், புதுச்சேரியில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரெய்டில் 4 மாநில தலைவர்கள் இந்தூர்-உஜ்ஜயினியில் கைது செய்யப்பட்டனர். பிஎப்ஐ தேசிய தலைவர் ஓஎம்ஏ சலாம், கேரளா தலைவர் சிபி முகம்மது பஹீர், தேசிய செயலாளர் நசருதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் டெல்லியில் இருக்கும் என்ஐஏவின் டெல்லி தலைமையகத்துக்கு சிலர் அழைத்து வரப்படுகின்றனர்.
தமிழகத்தில் PFI நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் திடீர் சோதனை- காரணம் என்ன..?
பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு இருக்கும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியிடம் இன்று எர்ணாகுளத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது ரெய்டு தொடர்பான கேள்விக்கு, ''அனைத்து வகையான வகுப்புவாதமும் வன்முறையும், அவை எங்கு இருந்து வந்தாலும், ஒரே மாதிரியானவை தான். அவற்றை எதிர்க்க வேண்டும் . இதை ஏற்றுக் கொள்ள முடியாது, சகித்துக் கொள்ள முடியாதது'' என்றார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா 2006 இல் கேரளாவில் உருவாக்கப்பட்டது மற்றும் டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. லக்னோவில் உள்ள சிறப்பு சட்ட விரோத பண பரிமாற்ற நீதிமன்றத்தில் பிஎப்ஐ மற்றும் அதன் அலுவலக பணியாளர்களுக்கு எதிராக விசாரணை அமைப்புகள் இரண்டு குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரியில், அமலாக்கத்துறை தனது முதல் குற்றப்பத்திரிகையை பிஎப்ஐ மற்றும் அதன் மாணவர் பிரிவான கேம்பஸ் பிரன்ட் அப் இந்தியா (CFI) மீது பணமோசடி குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்து இருந்தது. ஹத்ராஸ்சில் 2020 ஆம் ஆண்டு நடந்த கூட்டுப் பலாத்கார சம்பவத்திற்குப் பின்னர் வகுப்புவாதக் கலவரங்களைத் தூண்டவும் பயங்கரவாதத்தை பரப்பவும் இவர்கள் முயற்சித்ததாக கூறப்பட்டது. இதையடுத்து, கேம்பஸ் பிரன்ட் அப் இந்தியாவின் தேசிய பொதுச் செயலாளர் மற்றும் பிஎப்ஐ-ன் உறுப்பினரான கேஏ ரவுப் ஷெரிப், அதிகுர் ரஹ்மான், சிஎப்ஐ தேசிய பொருளாளர் மசூத் அகமது, டெல்லியைச் சேர்ந்த சிஎப்ஐ பொதுச் செயலாளர், பத்திரிகையாளரும் பிஎப்ஐ உடன் தொடர்புடையவரான சித்திக் கப்பன் மற்றும் முகமது ஆலம் ஆகியோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, அசாம், டெல்லி, உ.பி., ம.பி., மகாராஷ்டிராவில் நடந்த இந்த அதிரடி நடவடிக்கையில் கிடைத்த ஆதாரங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் கூட்டம் நடந்தது. இதில் என்எஸ்ஏ தலைவர் அஜித் தோவல், உள்துறை செயலாளர் அஜய் பல்லா, என்ஐஏவின் தலைமை இயக்குனர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த சோதனையின் பின்னணியில் மூன்று முக்கிய ஆதாரங்கள் தேசிய புலனாய்வு அமைப்புக்கு கிடைத்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலாவதாக கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் ஐதராபாத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை அதிகரிக்க அதிக அளவில் நிதியுதவி செய்யப்பட்டுள்ளது. இரண்டாவதாக பல மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக பிஎப்ஐ சந்தேகத்திற்கிடமான பயிற்சி முகாம்களை பெரிய அளவில் நடத்தி வருகிறது என்பதற்கு வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மூன்றாவதாக ஜூலையில், பாட்னாவுக்கு அருகிலுள்ள புல்வாரி ஷெரீப்பில் பிஎப்ஐ உறுப்பினர்களிடமிருந்து இந்தியா 2047 என்ற 7 பக்க ஆவணமும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில், அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை முஸ்லிம் நாடாக மாற்றும் திட்டம் வரையறுக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.