ஆந்திரா காங்கிரஸ் தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா நியமனம்!

ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா நியமனம் செய்யப்பட்டுள்ளார்

YS Sharmila appointed as Andhra pradesh Congress president smp

ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா, அம்மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியை (ஒய்எஸ்ஆர்டிபி) காங்கிரஸுடன் இணைப்பதாக அறிவித்த ஒய்.எஸ்.ஷர்மிளா, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் முன்னிலையில், கடந்த 4ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

ஆந்திரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து கிடுகு ருத்ர ராஜு ராஜினாமா செய்ததையடுத்து, மாநில காங்கிரஸ் தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளாவை காங்கிரஸ் மேலிடம் நியமித்துள்ளது. இதற்கான உத்தரவை மல்லிகார்ஜுன கார்கே பிறப்பித்துள்ளார். அதேசமயம், காங்கிரஸ் காரியக் கமிட்டியின் சிறப்பு அழைப்பாளராக கிடுகு ருத்ர ராஜு நியமிக்கப்படுவதாகவும் காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட ஒய்.எஸ்.ஷர்மிளா, “முழு அர்ப்பணிப்பு மற்றும் ஒருமைப்பாட்டுடன் மாநிலத்தில் கட்சியை அதன் கடந்த கால புகழுடன் மீண்டும் கட்டியெழுப்ப உண்மையாக உழைப்பேன்.” என தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த ஆந்திர முதல்வராக இருந்த மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகளும், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலங்கானாவில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த 2021ஆம் ஆண்டில் ஒய்.எஸ்.ஆர்.தெலங்கானா எனும் தனிக்கட்சியை ஆரம்பித்து அதன் தலைவராக செயல்பட்டு வந்தார். கடந்த தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டால் வாக்குகள் பிரிந்து அது சந்திரசேகர ராவ் கட்சிக்கு சாதகமாக அமைந்து விடும் என்பதால், தேர்தலில் அவரது கட்சி களம் காணவில்லை.

மேலும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்த ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரஸ் கட்சியுடன் தனது கட்சியை இணைக்கப்போவதாகவும், அக்கட்சியில் இணையப்போவதாகவும் தகவல்கள் பரவி வந்த நிலையில், தெலங்கானா தேர்தலுக்கு பின்பு கடந்த 4ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தெலங்கானா மாநில பணிகளுக்கு ஒய்.எஸ்.ஷர்மிளாவை காங்கிரஸ் மேலிடம் அனுப்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது சகோதரரின் ஆட்சி நடக்கும் ஆந்திர மாநிலத்துக்கு ஒய்.எஸ்.ஷர்மிளா அனுப்பப்பட்டுள்ளார். எதிர்வரவுள்ள ஆந்திர மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால், அம்மாநில காங்கிரஸ் முதல்வர் பதவி ஒய்.எஸ்.ஷர்மிளாவுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

தெலங்கானாவில் ரூ.12400 கோடி முதலீடு: அதானி குழுமம் அறிவிப்பு!

ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் இரண்டு முறை முதல்வராக இருந்து கடந்த 2008ஆம் ஆண்டில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகளான ஒய்.எஸ்.ஷர்மிளாவின் நியமனம், மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஊக்கமளித்து தேர்தலில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் செல்வாக்கை அறுவடை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜகவுக்கும் அங்கு கணிசமான வாக்கு வங்கி உள்ள நிலையில், ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளாவின் நியனம் கவனம் ஈர்த்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சி வெற்றி பெற்று ஆட்சியில் அமர, ஒய்.எஸ்.ஷர்மிளாவின் பங்கு அளப்பரியது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios