உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், முகலாயர்கள் இந்தியாவை இஸ்லாமியமயமாக்க முயன்றதாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஔரங்கசீப்பின் கொடுமைகளுக்கு எதிராக நின்ற சீக்கிய குரு தேக் பகதூரின் தியாகத்தை அவர் நினைவு கூர்ந்தார்.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், முகலாய ஆட்சியாளர்கள் மீது கடும் தாக்குதலைத் தொடுத்துள்ளார். முகலாயர்கள் முழு நாட்டையும் இஸ்லாமிய மயமாக்க முயன்றதாகவும், இந்து அடையாளங்கள் மற்றும் நடைமுறைகளை அழிக்க முயன்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் மத ரீதியான வன்முறையைத் தீவிரப்படுத்தியதாகவும், இந்து பாரம்பரியங்களை அழிப்பதற்கு வன்முறையைப் பயன்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"முகலாயர்கள் முழு இந்தியாவையும் இஸ்லாமியமயமாக்கும் ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கினர்," என்று ஆதித்யநாத் கூறினார். ஔரங்கசீப் 'திலகம்’, 'பூணூல்' ஆகியவற்றை அழிக்க முயன்றதாக அவர் குற்றம் சாட்டினார். ஔரங்கசீப் ஆட்சியில் காஷ்மீரில் ஒடுக்குமுறைகள் தீவிரமடைந்த குறித்தும் அவர் பேசினார்.
குரு தேக் பகதூரின் தியாகம்
சீக்கிய வரலாற்றைக் குறிப்பிட்ட முதல்வர் யோகி ஆதித்யநாத், அந்தக் காலகட்டத்தில் குரு தேக் பகதூர் முகலாயர்களின் வன்முறைக்கு எதிராக நின்றார் என்று கூறினார்.
குருவின் தோழர்கள் அனுபவித்த சித்திரவதைகளையும் யோகி விவரித்தார். பாய் மதி தாஸ் முதலில் சித்திரவதை செய்யப்பட்டு, ரம்பத்தால் துண்டுகளாக அறுக்கப்பட்டார். பாய் சதி தாஸ் பஞ்சு மூட்டையில் வைத்து எரிக்கப்பட்டார். பாய் தயாலா கொதிக்கும் நீர் நிறைந்த தொட்டியில் வீசப்பட்டார் என அவர் சுட்டிக்காட்டினார்.
"அவர்கள் உயிர் தியாகம் செய்த போதிலும், குரு தேக் பகதூர் தனது நம்பிக்கையிலோ உறுதியிலோ சற்றும் தளரவில்லை," என்று அவர் கூறினார்.
காவிக் கொடி கலாச்சார எழுச்சி
இந்து அடையாளங்களை அழிக்க முற்பட்ட ஔரங்கசீப், ஒரு கொடூரமான மன்னராக மாறினார் என்றும் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
அயோத்தியில் சனாதனத்தின் காவிக்கொடி இன்று உயர்ந்துள்ளது எனக் குறிப்பிட்ட அவர், "இந்தக் காவிக் கொடிக்காகத்தான் சீக்கிய சமூகத்தினர் தலைமுறை தலைமுறையாக தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர்” எனவும் தெரிவித்தார்.


