பீகார் தேர்தல் பிரச்சாரத்தில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ், அகிலேஷ் யாதவ் ஆகியோரை 'மூன்று குரங்குகள்' என விமர்சித்தார். அவர்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் எனவும் கடுமையாகச் சாடினார்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ், அகிலேஷ் யாதவ் மூவரையும் மூன்று குரங்குகளுடன் ஒப்பிட்டு கிண்டல் செய்தார். பீகார் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அந்த மாநிலத்தில் பிரசாரம் செய்தபோது இவ்வாறு பேசியுள்ளார்.

தர்பங்காவின் கேவடி தொகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், பப்பு, தப்பு, அப்பு என்று குறிப்பிட்டு மறைமுகமாக சாடினார்.

"மகாத்மா காந்திக்கு மூன்று குரங்குகள் இருந்தன. இப்போது, INDI கூட்டணிக்கும் மூன்று புதிய வகையான குரங்குகள் உள்ளன. ஒன்று பப்பு. இவரால் உண்மையையோ அல்லது நல்லதையோ பேச முடியாது. இன்னொருவர் தப்பு. இவரால் நல்லதைக் காண முடியாது. மூன்றாவது அப்பு. இவரால் உண்மையைக் கேட்க முடியாது. இவர்களால் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) வளர்ச்சிப் பணிகளைக் காணவும் முடியாது, ஏற்றுக்கொள்ளவும் முடியாது," என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.

ராகுல் காந்தி மீதும் விமர்சனம்

ராகுல் காந்தி வெளிநாட்டிற்குச் செல்லும்போது இந்தியாவுக்கு எதிராகப் பேசுவதாக யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டினார். மேலும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் ஆட்சியின்போது பீகார் படுகொலைகள் மற்றும் சட்ட ஒழுங்கின்மைக்கு சாட்சியாக இருந்தது என்றும் அவர் கூறினார்.

"ஆர்ஜேடி ஆட்சியின்போது, பீகாரில் 76-க்கும் மேற்பட்ட படுகொலைகள் நிகழ்ந்தன. சாதிக் கலவரங்கள் ஏற்பட்டன, ஆள் கடத்தல் ஒரு தொழிலாக மாறியது. இன்று, மிதிலா பகுதியில் அமைதி நிலவுகிறது—கலவரங்கள் இல்லை, குழப்பம் இல்லை," என்று அவர் தெரிவித்தார்.

இந்துக்களுக்கு எதிரானவர்கள்

சமாஜ்வாதி கட்சியையும் தாக்கிய யோகி ஆதித்யநாத், "சமாஜ்வாதி கட்சி அயோத்தியில் ராம பக்தர்களைச் சுடுவதற்கு உத்தரவிட்டது; புனித நகரத்தை ரத்தத்தால் சிவப்பாக்கியது" என்று குற்றம் சாட்டினார்.

"ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் இந்துக்களுக்கு எதிராக உள்ளன. அவர்கள் ராமர் மற்றும் சீதையின் எதிரிகள். காஷ்மீரை ஒரு சர்ச்சைக்குரிய பகுதியாக மாற்றி, பாகிஸ்தானியர்கள் அங்கே தங்க அனுமதித்ததே காங்கிரஸ் தான். ஆனால், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் காஷ்மீரைத் பயங்கரவாதத்திலிருந்து விடுவித்துள்ளனர்," என்றும் அவர் குறிப்பிட்டார்.