பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதிலடி கொடுத்துள்ளார். பிரதமர் மோடி தனது மகனின் திருமணம் போல பீகாரில் பிரசாரம் செய்வதாகவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் விமர்சனத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதிலடி கொடுத்துள்ளார். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அதிகாரத்துக்காக பாரதிய ஜனதா கட்சியிடம் சரண் அடைந்துவிட்டார் என்றும், அவருக்கு மீண்டும் முதல்வர் பதவியை பாஜக வழங்காது என்றும் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
நிதிஷ் குமாரின் சீடருக்குத்தான் முதல்வர் பதவி
தேர்தல் நடக்கவுள்ள பீகாரின் வைஷாலியில் நடந்த பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய கார்கே, "நிதிஷ் குமார் தற்போது பாஜகவின் மடியில் இருக்கிறார். ஆனாலும் அவருக்கு முதல்வர் பதவியை பாஜக கொடுக்காது. மாறாக, அவரது சீடர் ஒருவருக்கு அந்தப் பதவியை அளிக்கும்," என்று கூறினார்.
"அவர் (நிதிஷ் குமார்) ஒன்பது முறை முதல்வராகப் பதவிப் பிரமாணம் எடுத்துள்ளார், இருபது ஆண்டுகளாக ஆட்சி செய்துள்ளார். ஆனாலும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவோ, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கவோ முடியவில்லை. பீகார் இளைஞர்கள் வேலைக்காக வெளி மாநிலங்களுக்குச் செல்லும் நிலைதான் உள்ளது” என்று கார்கே விமர்சித்தார்.
மனு ஸ்மிருதியை நம்பும் பாஜகவுடன் கூட்டு
மேலும், ஜெயப்பிரகாஷ் நாராயண், ராம் மனோகர் லோஹியா மற்றும் கர்பூரி தாக்கூர் போன்ற சோஷலிச ஆளுமைகளின் பாரம்பரியத்துக்கு நிதிஷ் குமார் துரோகம் செய்துவிட்டதாகவும், 'மனு ஸ்மிருதி'யை நம்பும், பெண்களுக்கு எதிரான பாஜகவுடன் அவர் கைகோர்த்து விட்டதாகவும் கார்கே சாடினார்.
தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக (EBC) நிதிஷ் குமார் இனி குரல் கொடுக்க முடியாது என்றும் கார்கே ஆவேசமாகக் கூறினார்.
'மகனின் திருமணம்' போலப் பிரசாரம் செய்யும் பிரதமர்
பிரதமர் நரேந்திர மோடியையும் கார்கே விமர்சித்தார். பீகாரில் பிரதமர் மோடி, "தன் மகனின் திருமணத்தை நடத்துவது போல" தீவிரமாகப் பிரசாரம் செய்வதாகக் கிண்டல் செய்தார்.
"பிரதமருக்கு உலகம் சுற்ற நேரம் இருக்கிறது, ஆனால் தன் நாட்டில் உள்ள விவகாரங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள நேரமில்லை. தேர்தல் வரும்போது மட்டுமே அவர் இங்கு தென்படுகிறார். ஒரு நகராட்சியில் தேர்தல் நடந்தாலும் கூட, மோடி வீதி வீதியாகச் சுற்றுவதைப் பார்க்கலாம். பீகார் சட்டமன்றத் தேர்தலிலும், அவர் தன் மகனின் திருமணம் போல மும்முரமாக இருக்கிறார்," என்று கார்கே மோடியை விமர்சித்தார்.
பீகார் தேர்தல் அட்டவணை
பீகார் சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆளும் ஐக்கிய ஜனதா தளம் (JD(U))-பாஜக கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் தாக்குதலைக் கூர்மையாக்கி வருகின்றனர்.
பீகாரில் முதல் கட்டத் தேர்தல் (121 தொகுதிகள்) நவம்பர் 6ஆம் தேதி நடக்க உள்ளது. அதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டத் தேர்தல் (122 தொகுதிகள்) நவம்பர் 11ஆம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் வெளியாகும்.
