தாஜ் மஹாலை சூழ்ந்த வெள்ளம்; டெல்லியை மீண்டும் மிரட்டும் யமுனை!!
யமுனை ஆற்றில் மீண்டும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் வெள்ள அபாயம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

யமுனை ஆற்றில் கடந்த 45 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த வாரம் 208.65 மீட்டர் உயரத்திற்கு வெள்ளம் ஏற்பட்டு இருந்தது. டெல்லியின் முக்கிய இடங்களான செங்கோட்டை, ராஜ்கோட் ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி இருந்தன. கடந்த 12 மணி நேரங்களுக்கு முன்புதான், வெள்ளம் வடிந்த பகுதிகளில் மக்கள் மீண்டும் குடியேறத் தொடங்கினர். இந்த நிலையில் மீண்டும் யமுனையில் வெள்ளம் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இன்று காலை 8 மணிக்கு 205.48 மீட்டரை எட்டிய நீர்மட்டம் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு 205.60 மீட்டரை எட்டியதாக மத்திய நீர் ஆணையத்தில் இருந்து வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன. மாலை 6 மணியளவில் 205.72 மீட்டராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹத்னிகுண்ட் அணையின் நீர்வரத்து செவ்வாய்க்கிழமை பிற்பகலில் 50,000 கன அடியாக இருந்து தற்போது இது 60,000 கனஅடி வரை அதிகரித்துள்ளது. இந்த தடுப்பணையில் இருந்து வெளியேறும் நீர்தான் யமுனையில் கலக்கிறது. இதுதான் டெல்லியில் வெள்ளத்திற்கு காரணமாகவும் கூறப்படுகிறது.
உத்தரகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் ஜூலை 22 வரை சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் இருக்கும் என்றும், டெல்லியில் புதன்கிழமை மிதமான மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆற்றின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் அபாயக் குறியான 205.33 மீட்டருக்குக் கீழே சரிந்தது. புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் 205.22 மீட்டராக மீண்டும் உயர்ந்துள்ளது.
பென்டகனை மிஞ்சிய குஜராத் கட்டிடம்! உலகின் மிகப்பெரிய அலுவலகத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!
நீர் மட்டம் அதிகரிப்பதால், டெல்லியில் நிவாரண முகாம்களில் தங்கி இருக்கும் மக்கள் இன்னும் அங்கேயே தங்கி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
யமுனை ஆற்று நீர் ஆக்ரா நகரில் இருக்கும் தாஜ்மஹாலின் சுவர்களை சூழ்ந்துள்ளது. முகலாய பேரரசர் ஷாஜஹான் தனது மனைவி மும்தாஜ் நினைவாக கட்டிய நினைவுச்சின்னத்தின் சுவர்களை கடைசியாக யமுனை ஆற்றின் நீர் கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்பு, 1978 - ல் சூழ்ந்து இருந்தது என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.