ராஜஸ்தானில் 6 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை: காங்கிரஸை வெளுத்து வாங்கும் பாஜக!
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஆறு மாத குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொடூரமாக கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 6 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டுள்ளனர். அந்த குடும்பத்தினர் இரவு நேரத்தில் தங்களது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, அவர்களை கொலை செய்த கும்பல், அதன்பிறகு அவர்களது சடலங்களை முற்றத்துக்கு இழுத்து சென்று தீ வைத்து எரித்துள்ளனர்.
இதுதொடர்பான தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற காவல் கண்காணிப்பாளர் தர்மேந்திர சிங் யாதவ், சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இந்த கொடூரக் கொலைகள் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் ஜோத்பூர் மாவட்டம் செராய் கிராமத்தில் அரங்கேறியுள்ளது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இக்கொலை சம்பவம் அதிகாலை 3 மணியளவில் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது, அவர்கள் தாக்குதல் நடத்திய மர்ம கும்பல், அவர்களை கொலை செய்து, பின்னர் சடலங்களை முற்றத்துக்கு இழுத்து வந்து எரித்துள்ளனர். ஆறு மாத பெண் குழந்தை மீதும் அக்கும்பல் இரக்கம் காட்டவில்லை. அக்குழந்தையையும் சேர்த்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கு.. இதற்காக தான் கொலை செய்தேன்.. கள்ளக்காதலன் பகீர்.!
பாதிக்கப்பட்ட வீட்டில் இருந்து புகை வருவதை பார்த்த கிராம மக்கள், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தடயவியல் குழுவினர் உதவியுடன் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த படுகொலை என்ன காரணத்திற்காக நடத்தப்பட்டது, யார் இதில் ஈடுபட்டார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், குடும்ப தகராறாக இருக்கலாம் என கூறப்படுகிறது. போலீசார் தகவலின்படி, பூனாராம் (55), அவரது மனைவி பன்வாரி (50), மருமகள் தாபு (24) மற்றும் அவர்களின் 6 மாத மகள் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடந்த இந்த கொடூர கொலைகள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ராஜஸ்தானில் அதிகரித்து வரும் குற்றங்கள் தொடர்பாக அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
இதுகுறித்து பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷாஜத் ஜெய்ஹிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “அசோக் கெலாட்டின் சொந்த மாவட்டமான ஜோத்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. இதில் 6 மாத குழந்தையும் அடங்கும். சமீபத்தில் கரௌலியில் 19 வயது தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ஆசிட் வீச்சுக்கு உள்ளானார். ஜோத்பூரில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானர். சிகாரில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடக்கிறது. ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. காங்கிரஸ் என்றால் அராஜகத்திற்கு உத்தரவாதம். ஆனால், இதுகுறித்து பிரியங்கா, ராகுல் ஒரு வார்த்தை கூட பேசமாட்டார்கள். நான் ஒரு பெண் என்பது பிரியங்கா வெற்று கோஷம் போடுகிறார். பெண்களும், குழந்தைகளும் அவர்களுக்கு அரசியலின் கருவிகள்.” என விமர்சித்துள்ளார்.