ஹிமாச்சல பிரதேசம் மாநிலம் மணாலியிலிருந்து லடாக்கின் லே பகுதியை இணைக்கும் நெடுஞ்சாலையில் 9.02 கிமீ தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ளது அடல் சுரங்கப்பாதை. 

கடல் மட்டத்திலிருந்து சுமார் 3000 மீட்டர் உயரம்(10 ஆயிரம் அடி) உயரத்தில் 9.02 கிமீ தொலைவிற்உ அமைக்கப்பட்டுள்ள அடல் சுரங்கப்பாதை தான் உலகிலேயே மிக உயரத்தில் அமைக்கப்பட்ட மற்றும் உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை. மணாலியையும் லாஹாவ் - ஸ்பிட்டி பள்ளத்தாக்கு பகுதியையும் இணைக்கும் வகையில் இந்த சுரங்கபாதை உருவாக்கப்பட்டுள்ளது. 

மணாலி - லே இடையிலான சாலைப்பயண தூரத்தை 46 கிமீ அளவிற்கும், பயண நேரத்தில் 4-5 மணி நேரம் குறைப்பதாகவும் அமைந்துள்ளது அடல் சுரங்கப்பாதை.

குதிரை லாடத்தின் வடிவத்தில் அமைந்துள்ள ஒரே சுரங்கமாக, இரண்டு லேன்கள் கொண்ட இந்தப் பாதையில், வாகனங்கள் செல்ல 8 மீட்டர் அகலத்துக்கு இடவசதி உள்ளது. 5.525 மீட்டர் உயரம் வரையிலான வாகனங்கள் இந்த சுரங்கப்பாதையில் செல்லலாம். இந்தப் பாதை 10.5 மீட்டர் அகலம் கொண்டது. 3.6 X 2.25 மீட்டர் அளவில் தீ பிடிக்காத, அவசர கால சுரங்கம், பிரதான சுரங்கத்துடன் இணைக்கப்பட்டதாக இருக்கிறது. 

தினமும் 3,000 கார்கள் மற்றும் 1,500 லாரிகள் செல்லும் வகையிலும், அதிகபட்சம் மணிக்கு 80 கிமீ வேகத்தில் செல்லக் கூடிய வகையிலும் அடல் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. சுரங்கப்பாதை என்றாலும் போதிய காற்றோட்ட வசதி கொண்டதாகவும், SCADA கட்டுப்பாட்டில் இயங்கும் தீயணைப்பு அம்சங்கள் கொண்டதாகவும் இந்த சுரங்கப்பாதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப் பாதைக்குள் ஒவ்வொரு 60 மீட்டருக்கும் ஒரு சிசிடிவி கேமரா, ஒவ்வொரு 500 மீட்டருக்கும் ஒரு அவசரகால வழி அமைக்கப்பட்டுள்ளது. சுரங்கப்பாதையின் 2 பக்கத்திலும் 1 மீட்டருக்கு நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது.

கடும் பனிப்பொழிவு காரணமாக ஆண்டுதோறும் சுமார்  6 மாத காலத்துக்கு இந்த பள்ளத்தாக்குப் பகுதிக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டு வந்த நிலையில், அடல் சுரங்கப்பாதையால் இனிமேல் ஆண்டு முழுவதும் எந்தவிதமான சீதோஷ்ண நிலையிலும் போக்குவரத்து தடையில்லாமல் நடைபெறும்.