கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில், ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில், பிறந்து மூன்று நாட்களே ஆன தனது நான்காவது பெண் குழந்தையைத் தாயே கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். மீண்டும் பெண் குழந்தை பிறந்த விரக்தியில் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
பிறந்து மூன்று நாட்களே ஆன தனது நான்காவது பெண் குழந்தையைத் தாயே கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஹிரேமுலாங்கி கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, கைது செய்யப்பட்ட தாயார் அஸ்வினி ஹல்கட்டி மீது சுரேபான் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆண் குழந்தை ஆசை
ஹிரேமுலாங்கியைச் சேர்ந்த அஸ்வினி ஹல்கட்டிக்கு ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில், அவர் ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்துள்ளார்.
கடந்த நவம்பர் 23 அன்று, முடகாவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இவருக்கு நான்காவது பெண் குழந்தை பிறந்துள்ளது. மறுநாள், அஸ்வினி தனது பிறந்த வீட்டிற்குத் திரும்பியுள்ளார். செவ்வாய்க்கிழமை (நவம்பர் 25) காலையில், தனது தாயார் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்தபோது, அஸ்வினி அந்தக் குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதாக நடித்து, பின் அக்குழந்தையை ராம் துர்க் தாலுகா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். ஆனால், அங்கே மருத்துவர்கள் குழந்தை கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டதை உறுதி செய்தனர்.
குற்றத்தை ஒப்புக்கொண்ட தாய்
காவல்துறையின் விசாரணையின்போது, தாய் அஸ்வினி தனது கொடூரமான செயலை ஒப்புக்கொண்டார். தனக்கு மற்றொரு பெண் குழந்தை பிறந்ததால் ஏற்பட்ட விரக்தியே இதற்குக் காரணம் என்று காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
குழந்தை பெற்றெடுத்த காரணத்தால், அஸ்வினி தற்போது ராம் துர்க் அரசு மருத்துவமனையில் போலீஸ் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ராம் துர்க் துணை காவல் கண்காணிப்பாளர் (DSP), சிதம்பர மடிவாளர், சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தினார். இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இன்னொரு கொடூர சம்பவம்
இதுபோன்ற மற்றொரு சம்பவத்தில், கடந்த பிப்ரவரி 29, 2024 அன்று, தார்வாட் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தந்தை தனது ஏழு மாதக் குழந்தையைச் சுவரில் எறிந்து கொன்றது வெளிச்சத்துக்கு வந்தது. கொலை செய்யப்பட்ட வைஷ்ணவி என்ற அந்தக் குழந்தை, ஹூப்பள்ளியில் உள்ள கிம்ஸ் (KIMS) மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. போலீசார் நடந்திய விசாரணையில், ஆண் குழந்தை ஆசையில் தந்தை இந்தச் கொடூரச் செயலைச் செய்ததாக தெரியவந்தது.


