தமிழகச் சிறைகளில் தாய்மார்களுடன் வசிக்கும் குழந்தைகள் ஆறு வயதை எட்டியதும், அவர்களின் நிலை குறித்து கண்காணிக்க முறையான அமைப்பு இல்லை. இதனால் அவர்களின் எதிர்காலம் புறக்கணிப்பு மற்றும் சுரண்டலுக்கு உள்ளாகும் அபாயத்தில் உள்ளது.
தமிழகச் சிறைகளுக்குள் தங்கள் தாய்மார்களுடன் வசிக்கும் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. அவர்கள் ஆறு வயதை அடையும் வரை மட்டும் சிறைத்துறை அவர்களைக் கண்காணித்து வருகிறது. ஆறு வயதுக்குப் பிறகு, அவர்களின் நிலை குறித்து கண்காணிக்க அதிகாரப்பூர்வமான வழிமுறைகள் ஏதும் இல்லை.
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்டுள்ள 'இந்தியச் சிறைச்சாலை புள்ளிவிவரங்கள் 2023' அறிக்கையின்படி, 2023 டிசம்பர் 31 நிலவரப்படி, தமிழ்நாட்டில் உள்ள 18 பெண் கைதிகள், 22 குழந்தைகளுடன் சிறைகளில் வசித்து வருகின்றனர். நாடுமுழுவதும் தாய்மார்களுடன் சிறையில் வசிக்கும் பெண் கைதிகளின் மொத்த எண்ணிக்கையில், 1.4% பேர் தமிழ்நாட்டில் உள்ளனர்.
ஆறு வயதுக்குப் பின் குழந்தைகளின் நிலை என்ன?
சிறை விதிமுறைகளின்படி, ஆறு வயது நிறைவடைந்தவுடன், இந்தக் குழந்தைகள் அவர்களது தாய்மார்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறவினர்கள், பாதுகாவலர்கள் அல்லது சமூகப் பாதுகாப்புத் துறையின் பராமரிப்பில் ஒப்படைக்கப்படுகின்றனர். இந்த மாற்றத்துக்குப் பிறகு, அந்தக் குழந்தைகளின் நிலைமை குறித்து எந்தப் பதிவுகளும் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை.
தற்போதுள்ள நடைமுறையின்படி, குழந்தையை சிறையிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டவுடன் கண்காணிப்பு முடிந்துவிடுகிறது என தமிழ்நாடு சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகிறார்.
"குழந்தைகள் ஆறு வயதை அடைந்ததும் சமூகப் பாதுகாப்புத் துறை அல்லது அவர்களது தாய்மார்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள். பாதுகாவலரிடம் ஒப்படைக்கப்பட்டால், தாயின் கோரிக்கையின் பேரில், மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே அவர்களைப் பற்றி விசாரணைகள் மேற்கொள்ளப்படும். அதையும் தாண்டி அவர்களின் நிலையைக் கண்காணிப்பதற்கான அமைப்பு எதுவும் இல்லை,” என்று அந்த அதிகாரி கூறுகிறார்.
சமூகப் பாதுகாப்புத் துறையில் கண்காணிப்பு இல்லை
சமூகப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும், குழந்தைகளைக் கண்காணிப்பதற்கான வழிமுறைகள் இல்லாததை உறுதிப்படுத்தியுள்ளனர். "மாவட்ட குழந்தைகள் நலப் பாதுகாப்பு அதிகாரிகள் சிறைகளுக்குச் சென்று குழந்தைகளின் பராமரிப்பைக் கண்காணித்தாலும், பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகளைக் கண்காணிக்கும் அமைப்பு இல்லை" என்று ஒரு அதிகாரி தெரிவிக்கிறார்.
புதிய விதிகளில் இடம் இல்லை
கடந்த நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட 'தமிழ்நாடு சிறை விதிகள், 2024', விடுவிக்கப்பட்ட கைதிகளுக்கு ஆலோசனைகள், வேலைவாய்ப்பு மற்றும் வீட்டு வசதி போன்ற மறுவாழ்வு உதவிகள் செய்வது பற்றிக் கூறுகிறது. சிறைக்குள் வாழ்ந்த குழந்தைகளின் தொடர் பராமரிப்பு (After-care) குறித்து எந்த ஒரு அம்சமும் இடம்பெறவில்லை.
பெண் கைதிகள் மற்றும் அவர்களது குழந்தைகளின் நலனுக்காகப் பணியாற்றும் 'குளோபல் நெட்வொர்க் ஃபார் ஈக்வாலிட்டி' அமைப்பின் இணை நிறுவனர் வழக்கறிஞர் கே.ஆர். ராஜா கூறுகையில், "குழந்தைகள் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்படும்போது, அவர்களின் நல்வாழ்வு பெரும்பாலும் கண்காணிக்கப்படுவதில்லை. பலர் புறக்கணிப்பைச் சந்திக்கலாம் அல்லது கட்டாய வேலைக்குத் தள்ளப்படலாம்," என்று கவலை தெரிவிக்கிறார்.
திட்டங்களும் சவால்களும்
சமூக நலன் மற்றும் மகளிர் அதிகாரமளித்தல் துறையின் கொள்கைக் குறிப்பு (2025-26) கூறும் நிதி உதவி, கல்வி மற்றும் வளர்ப்புக்கு ஆதரவளிக்கும் திட்டம் இன்னும் அதிகாரப்பூர்வ அரசாணை (GO) மூலம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும், அந்ந்த் திட்டத்தின் விதிகள் தெளிவாக இல்லை என்றும் கே.ஆர்.ராஜா சுட்டிக்காட்டுகிறார்.
மும்பையின் டாடா சமூக அறிவியல் நிறுவனத்தின் (TISS) குற்றவியல் மற்றும் நீதி மையப் பேராசிரியர் விஜய் ராகவன், இந்தக் குறைபாடு தமிழ்நாட்டிற்கு மட்டும் உரியது அல்ல, இது நாடு முழுவதும் நிலவும் பிரச்சினை என்று தெரிவிக்கிறார்.
சிறைக் கைதிகளின் குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துரைத்த அவர், குறிப்பாக வெளியில் விடப்படும் குழந்தைகள் நிதி நெருக்கடி, புறக்கணிப்பு, பள்ளி இடைநிற்றல், மன உளைச்சல் மற்றும் சுரண்டல்களை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டார். இந்தக் கண்காணிப்பு இடைவெளியை நிரப்ப, மத்திய அரசின் 'மிஷன் வாத்ஸல்யா' திட்டத்தின் மூலம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் இதை மாவட்ட குழந்தைகள் நலப் பாதுகாப்பு அதிகாரிகள் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
வருங்கால என்.சி.ஆர்.பி. (NCRB) அறிக்கைகளில் சிறைக் கைதிகளின் குழந்தைகள் குறித்த தரவுகளைச் சேர்த்து பொறுப்புணர்வை உறுதி செய்யலாம் எனவும் ராகவன் பரிந்துரைக்கிறார்.
