ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில், வாகனத்திற்காக காத்திருந்த பெண் ஒருவரை ஓடும் வேனில் கடத்திச் சென்று இரண்டு பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. 2 மணி நேர சித்திரவதைக்குப் பிறகு, அப்பெண்ணை சாலையில் தூக்கி வீசிவிட்டு தப்பியோடியது.

ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் ஓடும் வாகனத்தில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அதிகாலையில் சாலையில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓடும் காரில் பயங்கரம்

பாதிக்கப்பட்ட பெண் நேற்று இரவு வாகன வசதி இல்லாமல் தவித்தபோது, அந்த வழியாக வந்த 'ஈக்கோ' (Eco) ரக வேன் ஒன்றில் ஏறியுள்ளார். அந்த வேனில் ஏற்கனவே இருவர் இருந்துள்ளனர். அந்தப் பெண்ணை அவர் இறங்க வேண்டிய இடத்தில் இறக்கிவிடாமல் சென்றுள்ளனர்.

குருகிராம் சாலையை நோக்கி கடத்திச் சென்ற அந்த நபர்கள், சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஓடும் வேனிலேயே அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனை அப்பெண் எதிர்க்க முயன்றபோது, அந்த கும்பல் அவரை கொடூரமாக தாக்கியுள்ளது. பின்னர் அதிகாலை 3 மணியளவில், பரிதாபாத்தின் எஸ்.ஜி.எம் (SGM) நகர் பகுதியில் ஓடும் வேனில் இருந்தே அப்பெண்ணை கீழே தள்ளிவிட்டுவிட்டு அந்த கும்பல் தப்பியோடியுள்ளது.

மருத்துவமனையில் அனுமதி

காயங்களுடன் மீட்கப்பட்ட அந்தப் பெண், தனது சகோதரிக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக அவர் பரிதாபாத் சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் காயங்களின் தீவிரம் காரணமாக டெல்லி எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு முகத்திலும் தலையிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. சுமார் 12 தையல்கள் போடப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

போலீசார் நடவடிக்கை

பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், குற்றவாளிகள் தங்கியிருந்த இடத்தை கண்டறிந்து இருவரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், தற்போது பரிதாபாத்தில் வசித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பெண்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் ஒருமுறை இச்சம்பவம் பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது.