மேகாலயா முதல்வர் அலுவலகம்.. சுற்றி வளைத்து தாக்கிய கும்பல்.. 5 பேர் காயம் - என்ன நடந்தது?
மேகாலயாவின் முதல்வர் கான்ராட் சங்மா அலுவலகம் மீது ஒரு கும்பல் பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேகாலயாவில் உள்ள நகராட்சியான துராவில், குளிர்கால தலைநகர் அமைக்க கோரி, கரோ மலைப்பகுதியை சேர்ந்த சிவில் சமூகக் குழுக்கள் அங்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மாவின் அலுவலகத்தை இன்று கும்பல் திடீரென தாக்கிய நிலையில் அங்கு இருந்த பாதுகாப்புப் படை வீரர்கள் 5 பேர் காயமடைந்தனர். நல்வாய்ப்பாக முதல்வர் சங்மா காயமின்றி தப்பினார். இருப்பினும் தற்போது நூற்றுக்கணக்கானோர் அவற்றுடைய அலுவலக வளாகத்தைச் சூழ்ந்துள்ளதால், அவர் துராவில் உள்ள தனது அலுவலகத்திற்குள் தான் இருந்து வருகின்றார்.
இன்று மாலை முதல்வர் அலுவலகத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கானோர் திரண்டு, அவரது அலுவலகத்தின் மீள் கற்களை வீசத் தொடங்கியதால் இந்த பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக சங்மாவின் அலுவலகத்திற்குள் கொண்டு வரப்பட்டனர், அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
காயமடைந்த பாதுகாப்புப் பணியாளர்கள் தரையில் படுத்திருப்பதையும், திரு. சங்மா அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பதையும் இணையத்தில் வெளியான படங்களின் மூலம் அறிந்துகொள்ளமுடிகிறது. திரு சங்மா பாதுகாப்பாக இருப்பினும், போராட்டக்காரர்கள் சாலையை மறித்துள்ளதால் அவரால் அலுவலகத்தை விட்டு வெளியே வர முடியவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
குளிர்கால தலைநகர் கோரிக்கை மற்றும் வேலை இடஒதுக்கீடு குறித்து விவாதம் நடத்த போராட்டக்காரர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு திரு. சங்மா கேட்டுக் கொண்டார். அந்த சந்திப்பில் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இதர பங்குதாரர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார். அடுத்த மாதம் மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் பேச்சுவார்த்தை தொடங்கும் முன், போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.