தேஜஸ்வி சூர்யாவை ஓரம் கட்டுகிறதா பாஜக? ஸ்டார் லிஸ்டில் இடம்பெறாதது ஏன்?
பாஜக புதன்கிழமை வெளியிட்ட 40 நட்சத்திர தலைவர்கள் பட்டியலில் தேஜஸ்வி சூர்யா இடம்பெறவில்லை. இதனால் கட்சியில் அவர் ஓரங்கட்டப் படுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாஜக கர்நாடகாவில் தனது முக்கியமான இளம் தலைவர்களில் ஒருவரான தேஜஸ்வி சூர்யாவை வரவிருக்கும் கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான நட்சத்திரப் பிரச்சாரகர்களின் பட்டியலில் இருந்து விலக்கியுள்ளது. இந்த நடவடிக்கை மாநில அரசியலில் அவரது பங்கு மற்றும் செல்வாக்கு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.
30 வயதான தேஜஸ்வி சூர்யா பாஜகவின் இளைஞர் பிரிவுத் தலைவராகவும், பெங்களூரு தெற்கு நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். அவர் கட்சியின் இந்துத்துவ முகத்தின் குரலாக இருந்துவருகிறார். தொடர்ந்து எதிர்க்கட்சிகளை, குறிப்பாக காங்கிரஸை விமர்சிப்பதன் மூலம் பரவலாக அறியப்படுகிறார்.
இருப்பினும், பாஜக புதன்கிழமை வெளியிட்ட 40 நட்சத்திர தலைவர்கள் பட்டியலில் தேஜஸ்வி இடம்பெறவில்லை. இந்தப் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மாநிலம் மற்றும் மத்தியைச் சேர்ந்த பல மூத்த தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
Karnataka Elections 2023: டி.கே.சிவகுமார் சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
சமீபத்தில் விமானத்தில் பயணித்த தேஜஸ்வி விமானம் புறப்படுவதற்கு முன் அவசரகால வழியின் கதவைத் திறந்துவிட்ட சம்பவம் பரபரப்பானது. இந்த செயலால் தேஜஸ்வி கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு, கேலி செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் பெயர் பாஜகவின் ஸ்டார் பேச்சாளர்கள் பட்டியலில் இடம்பெறாதது கட்சி அவர் மீது எதிர்மறையான பார்வை கொண்டிருப்பதன் வெளிப்பாடு அல்ல என்று பாஜக வட்டார தகவலில் சொல்லப்படுகிறது.
தொகுதி மற்றும் அவரது கட்சிப் பணிகளில் கவனம் செலுத்துமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று பாஜக நிர்வாகி ஒருவர் தெரிவிக்கிறார். "அவர் நாடாளுமன்ற உறுப்பினர். பிரபலமான தலைவர். அவர் எப்படியும் கட்சிக்காக பிரச்சாரம் செயவார். எல்லா நேரத்திலும் பிரச்சாரப் பொறுப்பை அனைவரும் சுமக்க முடியாது" என மற்றொரு பாஜக தலைவர் நிர்வாகி சொல்கிறார்.
சூர்யா இதுவரை இது குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், "தேஜஸ்வி சூர்யா மாநிலம் முழுவதும் குறைந்தது 50 தொகுதிகளில் பிரச்சாரம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். அவர் நாளை புத்தூர், பைந்தூர் மற்றும் ஷிமோகாவில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்" எனவும் ஒரு தகவல் கிடைத்துள்ளது.
ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: சூரத் அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
கர்நாடகாவைச் சேர்ந்த மற்றொரு எம்.பி. பிரதாப் சிம்ஹாவும் தனது கடுமையான இந்துத்துவா கருத்துகளுக்கு பெயர் பெற்றவர். அவரது பெயரும் நட்சத்திரத் தலைவர்கள் பட்டியலில் விடுபட்டுள்ளது. சிம்ஹா மைசூரு-குடகு தொகுதியைச் சேர்ந்தவர். பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளராகவும் உள்ளார்.
ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவையும் பாஜக பட்டியலில் காணவில்லை. விஜயேந்திரா எடியூரப்பாவின் அரசியல் வாரிசாகக் கருதப்படுகிறார். ஜூலை மாதம் தந்தை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததில் இருந்து விஜயேந்திரா அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் (ஏப்ரல் 10) முடிகிறது.
ஸ்டார் தலைவர்களை களமிறக்கும் பாஜக! அனல் பறக்கும் கர்நாடக தேர்தல் பிரச்சாரம்!