ஸ்டார் தலைவர்களை களமிறக்கும் பாஜக! அனல் பறக்கும் கர்நாடக தேர்தல் பிரச்சாரம்!
கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துவரும் நிலையில், பாஜக அந்த மாநிலத்தில் பிரச்சாரம் செய்யவுள்ள ஸ்டார் தலைவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு பாஜக தலைவர்கள் பலர் அந்த மாநிலத்தை முற்றுகையிட ஆயத்தமாகி வருகின்றனர். அந்த மாநிலத்தின் 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மே மாதம் 10ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 13ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 20ஆம் தேதியுடன் (நாளை) அவகாசம் முடிகிறது. இந்நிலையில் பாஜக தங்கள் கட்சி சார்பில் பிரச்சாரம் செய்ய இருக்கும் நட்சத்திரத் தலைவர்களின் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தேர்தல் ஆணையத்திற்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிரதமர் மோடி, பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் யோகி ஆதித்தியநாத், சிவராஜ் சிங் செளகான், ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளிட்ட பலரும் கர்நாடாகவிற்குச் செல்ல உள்ளனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரது பெயர்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களிலும் பேரணிகளிலும் பங்கேற்றுப் பேசுகிறார். பெங்களூருவில் அவர் 10 கிமீ தூரத்துக்கு ரோடு ஷோ நடத்துகிறார். அவர் பங்கேற்கும் நிகழ்சிகளின் தேதி மற்றும் இடம் ஆகியவை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஆனால், சிருங்கேரி, பெங்களூரு, பேளூர், ஹூப்ளி, முல்கி-மோடுபிடிரே ஆகிய இடங்களில் அவர் பேசுவார் என்று கூறப்படுகிறது.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள மங்களூருவில் தொடங்கி பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்யவுள்ளார். பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங், பிரஹ்லாத் ஜோஷி, ஸ்மிருதி இரானி, ஆகியோரும் ஸ்டார் தலைவர்கள் பட்டியலில் உள்ளனர்.
இந்த முறை பாஜக மூத்த தலைவர்கள் பலருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுத்துள்ளது. இதனால் அதிருப்தி பலரும் அடைந்துள்ளனர். கே.எஸ்.ஈஸ்வரப்பா தனக்கு சீட் வழக்காததால் இனி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று முடிவு செய்துவிட்டார். மற்றொரு மூத்த தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாகிவிட்டார். மூத்த தலைவர்களுக்கு சீட் கிடைக்காமல் போனதற்கு அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்களில் ஒருவரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இவ்வாறு கட்சிக்குள் செல்வாக்கு மிக்க தலைவர்களின் அதிருப்தியைச் சம்பாதித்துள்ள நிலையில், இதுவரை வந்துள்ள வெவ்வேறு கருத்துக்கணிப்புகள் வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாகச் சொல்லி இருக்கின்றன. இந்தக் கணிப்புகளை முறியடித்து ஆட்சியைத் தக்கவைக்க பாஜக தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கின்றனர்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் 2023 - பாஜக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் அறிவிப்பு