ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: சூரத் அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சூரத் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சூரத் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், சிறைக்குச் செல்வதைத் தவிர்க்க ராகுல் காந்தி உடனடியாக குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தில் தண்டனையை நிறுத்தி வைக்குமாறு கோரலாம். மேல்முறையீட்டுக்கு உச்ச நீதிமன்றத்தை நேரடியாக நாடலாம் என்றாலும், சட்ட விதிகளின்படி முதலில் உயர் நீதிமன்றத்தில்தான் மேல்முறையீடு செய்யவேண்டும் என்று சொல்லப்படுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலாரில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி ஆகிய பெயர்களைக் குறிப்பிட்டு திருடர்களின் பெயர்கள் எல்லாம் மோடி என்று முடிவது ஏன்? எனப் பேசினார்.
இந்தப் பேச்சைக் கண்டித்து குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் சென்ற மார்ச் 23ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், ராகுல் காந்தி குற்றவாளி என அறிவித்து, 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. இந்தத் தீர்ப்பு அவதூறு வழக்கில் அளிக்கக்கூடிய அதிகபட்ச தண்டனையாகும். இதனால், மறுநாளே ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
சூரத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி ஏப்ரல் 3ஆம் தேதி சூரத் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தார். அதில் 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கவும் குற்றவாளியாக அறிவித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கவும் கோரி இருந்தார்.
அயோத்திக்கு வாங்க.. உங்களை நாங்க பார்த்துக்குறோம் - ராகுல் காந்திக்கு அழைப்பு விடுத்த சாமியார்
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் கமல் பதவுரியா தரப்பில் ராகுல் காந்தி மீது மற்றொரு அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பினரை 21ஆம் நூற்றாண்டின் கௌரவர்கள் என்று கூறியதற்காக இந்த அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு தானேவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, மகாத்மா காந்தி படுகொலை வழக்கில் ஆர்எஸ்எஸ் அமைப்பை குற்றம்சாட்டிப் பேசினார் என்பதற்காக அவதூறு வழக்கு போடப்பட்டது.
2015ஆம் ஆண்டு அசாமில் தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்றபோது ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் தன்னை கோயிலுக்குள் செல்ல விடாமல் தடுத்தனர் என்று தெரிவித்தார். இது குறித்தும் போரா நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இவை போல ராகுல் காந்தி மீது மொத்தம் 10 அவதூறு வழக்குகள் உள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.