பாகிஸ்தான் பிடியில் சிக்கியிருந்த விங் மாஸ்டர் அபிநந்தன் வாகா எல்லையில் ஒப்படைக்கும் போது அவருடன் ஒரு பெண் கூடவே வந்தார். அவரைப்பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

 

பாகிஸ்தானில் இருந்து விடுதலையான அபிநந்தனை அந்நாட்டு அதிகாரிகள் அட்டாரி -வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இரவு 9 மணிக்கு இந்திய அதிகாரிகளிடம் அபிநந்தன் ஒப்படைக்கப்பட்ட போது அவர் அருகிலேயே ஒரு பெண் உடன் வந்தார். வரேற்க திரண்டிருந்த மக்களும் அந்த போட்டோக்களை பார்த்த லட்சக்கணக்கானோர் மனதில் ஏற்பட்ட கேள்வி யார் இந்த பெண்? 

அந்தப்பெண் அபிநந்தனின் மனைவியும் அல்ல அவரது குடும்பத்து உறவினரும் அல்ல. அவர் டாக்டர் ஃபாரிஹா புக்தி. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக இயக்குநர். பாகிஸ்தானில் எஃப்.எஸ்.பி அதிகாரி. அதாவது நம்மூரில் ஐ.எஃப்.எஸ் அதிகாரிகளுக்கு இணையான பதவி. பாகிஸ்தான் வெளியுறவு துறை அலுவலகத்தில் இந்திய விவகாரங்களை கவனித்து வருகிறார்.

இந்தியாவுக்காக உளவு பார்த்ததாக பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் குல்பூஷன் ஜாதவ் வழக்கையும் ஃபாரிஹா கையாண்டு வருகிறார். கடந்த ஆண்டு தயார், மனைவி ஆகியோரை ஜாதவ் இஸ்லாமாபாத்தில் சந்திக்க ஏற்பாடு செய்தவரும் இவரே. இந்திய விமானப்படை விங் மாஸ்டர் அபிநந்தன் இரவு 9.20 மணிக்கு இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் வரை ஃபாரிஹா அருகிலேயே இருந்தார்.