கேரள மாநிலம், சாலக்குடியில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சாலக்குடி நகரில் உள்ள நியூ சாலமன் குடியிருப்புப் பகுதி உள்ளது. இங்கு 18க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடியிருப்பு அருகே இருக்கும் கிணற்றில் இருந்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை காலையில் வழக்கம் போல் குடியிருப்புவாசிகள் வீட்டுத் தண்ணீர் குழாயைத் திறந்ததபோது விஸ்கியும், பிராந்தியும், பீரும் கலந்த வாசனை கொண்ட தண்ணீர் வந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனால் குடியிருப்புவாசிகள் காரணம் புரியாமல் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அவர்கள் வந்து ஆய்வு செய்ததில் கிணற்றுக்கு அருகே இருக்கும் பெரிய பள்ளத்தில் ஏராளமான மதுபாட்டில்கள் இருந்துள்ளன. அந்த மதுவகைகள் கிணற்று நீரில் கலந்து மதுவாக மாறியுள்ளது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் சாலக்குடி பேருந்து நிலையம் அருகே சட்டவிரோதமாக இயங்கிய மதுபாரில் இருந்து 450 பெட்டிகள் கொண்ட மதுவகைகளைப் ரஞ்சாலக்குடா கலால் வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.

அந்த மது வகைகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்த நிலையில் 2500 லிட்டர் மது வகைகளை நீதிமன்றம் அழிக்க உத்தரவிட்டது. ஆனால், கலால் வரித்துறையினர் 450 பெட்டி மது வகைகளையும் அழிக்காமல் குடியுரிப்புவாசிகள் கிணற்றுக்கு அருகே இருக்கும் பள்ளத்துக்குள் கொட்டிவிட்டுச் சென்றனர். அந்த மது வகைகள் மெல்லத் தரைக்குள் இறங்கி குடிதண்ணீரில் கலந்துள்ளது என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.