1975ல் இந்திரா காந்தி பிரகடனப்படுத்திய அவசரநிலையின் போது, தமிழகத்தில் திமுக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஸ்டாலின் கைது, அவரது அரசியல் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. 

INDIA Emergency 1975 : இந்திய மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நாள் 1975 ஆம் ஆண்டு ஜூன் 25, இன்றைய தினம் தான் இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இந்தக் காலகட்டத்தில், இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு, உள்நாட்டு அரசியல் நெருக்கடிகளை காரணம் காட்டி, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 352-ன் கீழ் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியது. இது தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த கால கட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள், அரசியல் ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலர் மீசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். 

இந்திராகாந்தியின் இந்த முடிவிற்கு எதிராக நாடே கொந்தளித்தது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் இருந்து வலுவான குரலாக அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் எழுப்பப்பட்டது. தமிழகத்தில் அவசர நிலையை எதிர்த்து மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அவசரநிலைக்கு எதிராக கொந்தளித்த தமிழகம்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்த மு. கருணாநிதி, அவசர நிலைக்கு எதிராகவும், மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்தார். அப்போது கருணாநிதி கைது செய்யப்படவில்லை என்றாலும், அவரது ஆட்சி 1976 ஆம் ஆண்டு பல்வேறு குற்றச்சாட்டுகளை காரணம் காட்டி திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. அடுத்தாக ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அவசர நிலை காலத்தில் திமுகவின் பல தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர், தமிழகத்தில் கருணாநிதி அரசியல் நடவடிக்கைகள் மற்றும் எதிர்ப்பு காரணமாக மத்திய அரசுடன் மோதல் நிலவியது.

மிசாவில் ஸ்டாலின் கைது காரணம் என்ன.?

அவசரநிலை பிரகடனம் செய்த நிலையில் இந்திராகாந்திக்கு எதிராக தமிழகத்தில் பெரிய அளவில் போராட்டங்கள் வலுத்தது. அடுத்தடுத்து திமுகவினர் கைது செய்யப்பட்டனர். கருணாநிதியின் மகனும், திமுகவின் இளைஞர் அணி உறுப்பினருமாக இருந்த ஸ்டாலின் 1976 ஆம் ஆண்டு அவசர நிலைக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதற்காக MISA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். , திமுகவினர் அவசர நிலையை எதிர்த்து மக்களைத் திரட்டி, அரசுக்கு எதிரான பிரச்சாரங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியதால், ஸ்டாலின் உள்ளிட்ட பல திமுக தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டனர்.

தற்போதைய முதலமைச்சரான ஸ்டாலின், அவர் சென்னையில் உள்ள கோபாலபுரம் வீட்டில் 1976 பிப்ரவரி 1 ஆம் தேதி கைது செய்யப்பட்டு, சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட ஸ்டாலின் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டது. ஸ்டாலின் கைது செய்யப்பட்டது அவரது அரசியல் வாழ்க்கையில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. கருணாநிதியின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் திமுக தொண்டர்கள், உள் நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டத்தின் (MISA) கீழ் கைது செய்யப்பட்டனர். இதில் முரசொலி மாறன் உள்ளிட்டோர் அடங்குவர். 25,000 திமுக உறுப்பினர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். 

பத்திரிக்கைகளுக்கு கடும் கட்டுப்பாடு

தமிழகத்தில் உள்ள பத்திரிகைகள், குறிப்பாக திமுகவுக்கு ஆதரவானவை, அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிடுவதில் கட்டுப்பாடுகளை எதிர்கொண்டன. குறிப்பாக பத்திரிகைகளின் குரல் ஒடுக்கப்பட்டது, போராட்டங்கள் உள்ளிட்ட செய்திகள் வெளியிடாமல் தணிக்கை செய்யப்பட்டது. இந்திரா காந்தி அரசை விமர்சிக்கும் எந்தவொரு கருத்தும் கடுமையாக ஒடுக்கப்பட்டது.

எம்ஜிஆர், இந்திரா காந்தி அரசுக்கு ஆதரவாக இருந்தார், இதனால் அதிமுகவினர் அவசர நிலையின் கடுமையான தாக்கங்களிலிருந்து ஓரளவு பாதுகாக்கப்பட்டனர். பின்னர் எம்ஜிஆர் தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றி, 1977-ல் அவசர நிலைக்கு எதிராக மக்களின் ஆதரவைப் பெற்று, தமிழகத்தில் அதிமுக ஆட்சியைப் பிடித்தார்.

அவசர நிலை கைது செய்யப்பட்டவர்களில் முக்கியமானவர்கள்:

மொரார்ஜி தேசாய், வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள்.

ஜெயப்பிரகாஷ் நாராயணன்: மக்கள் இயக்கத் தலைவர், அவசர நிலைக்கு எதிரான முக்கிய எதிர்ப்பாளர்.

மாணவர் இயக்கத் தலைவர்களும் மற்றும் பத்திரிகையாளர்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டனர்.

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்திரா காந்திக்கு எதிராக வலுவான எதிர்ப்பை உருவாக்கின. இந்த ஒருங்கிணைந்த எதிர்ப்பு அவசரநிலையை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. இந்திரா காந்தியால் அமல்படுத்தப்பட்ட அவசர நிலை 1977 மார்ச் 21 வரை நீடித்தது, பின்னர் திரும்பப் பெறப்பட்டது.